அடுத்த மாதம் நடைபெற உள்ள ஆசிய கோப்பை 2025 தொடருக்கான இந்திய அணி தேர்வில், பல அதிரடி மற்றும் ஆச்சரியமான முடிவுகளை எடுக்க பிசிசிஐ தேர்வாளர்கள் குழு திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, இளம் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் நட்சத்திர விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் ஆகியோர் தற்போதைய டி20 அணியில் இல்லை என்றும், அவர்களுக்கு பதிலாக புதிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்திய தொடர்களில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் கூட, அணியின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால திட்டங்களை கருத்தில் கொண்டு நீக்கப்பட வாய்ப்புள்ளது.
THE COMPLETE SCHEDULE OF ASIA CUP 2025 pic.twitter.com/8bktQ7SfAz
— Tanuj (@ImTanujSingh) July 26, 2025
யஷஸ்வி ஜெய்ஸ்வால்
சுப்மன் கில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கேப்டனாக சிறப்பாக விளையாடி இருந்தார். அவரது அபாரமான ஃபார்ம் காரணமாக, மீண்டும் டி20 அணிக்கு திரும்ப உள்ளார். அபிஷேக் ஷர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக தொடர இருப்பதால் டாப்-ஆர்டரில் ஜெய்ஸ்வாலுக்கு இடம் கிடைப்பது மிகவும் கடினமாகியுள்ளது. 23 டி20 போட்டிகளில் ஒரு சதம் மற்றும் ஐந்து அரைசதங்களுடன் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும், அணியின் தற்போதைய காம்பினேஷன் காரணமாக அவர் வெளியேற நேரிடலாம்.
ரிஷப் பந்த்
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் போது, ரிஷப் பந்தின் காலில் காயம் ஏற்பட்டது. இந்த காயத்திற்கு அறுவை சிகிச்சை தேவைப்படாது என்றாலும், குறைந்தது ஆறு வாரங்கள் ஓய்வு தேவைப்படுவதால், அவர் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்க மாட்டார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அவரது காயம் குணமடைந்து வந்தாலும், முழு உடற்தகுதியை எட்ட கால அவகாசம் தேவைப்படும் என்பதால், தேர்வாளர்கள் அவரை தற்போதைக்கு பரிசீலிக்கவில்லை.
சஞ்சு சாம்சன் வாய்ப்பு?
ரிஷப் பந்த் இல்லாத நிலையில், அணியின் முதல் தேர்வு விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சனின் இடம் உறுதியாகியுள்ளது. ஆனாலும் பேக்-அப் விக்கெட் கீப்பர் அவசியம் என்பதால், அந்த இடத்திற்கு கடும் போட்டி நிலவுகிறது. இந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஐபிஎல் 2025 தொடரில் ஒரு ஃபினிஷராகக் கலக்கிய ஜிதேஷ் சர்மா, மற்ற வீரர்களை விட முன்னிலையில் இருப்பார் என்று கூறப்படுகிறது.
ஐபிஎல் தொடரில் லோயர்-மிடில் ஆர்டரில் களமிறங்கி, அதிரடியாக விளையாடிய அவரது திறன், இந்திய அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என தேர்வாளர்கள் கருதுகின்றனர். இந்த இடத்திற்கு துருவ் ஜூரெல் பெயரும் பரிசீலனையில் இருந்தாலும், ஜிதேஷ் சர்மாவின் பவர்-ஹிட்டிங் மற்றும் ஃபினிஷிங் திறமை அவருக்கு சாதகமாக அமைந்துள்ளது. இந்திய அணியின் டாப்-5 பேட்டிங் வரிசை அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா என கிட்டத்தட்ட முடிவாகிவிட்டதால், அணி தேர்வில் பல கடினமான முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதிகாரப்பூர்வ அணி அறிவிப்பு ஆகஸ்ட் 19 அல்லது 20 ஆம் தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.