Future all format captain: 2024 டி20 உலகக் கோப்பையை வென்று வரலாற்றுச் சாதனை படைத்த ரோஹித் சர்மா, அந்த வெற்றிக்குப் பிறகு டி20 கிரிக்கெட்டில் இருந்து விலகினார். அப்போது, அவரது வாரிசாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக வருவார் என எதிர்பாரப்பட்டாலும், புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ‘ஃபிட்னஸ்’ பிரச்சினையை காரணம் காட்டி பாண்டியாவை தலைமைப் பொறுப்பிலிருந்து நீக்கி, சூரியகுமார் யாதவை டி20 கேப்டனாக நியமித்தார்.
அதன்மூலம் சூரியகுமார் தலைமையில் இந்திய டி20 அணி நல்ல செயல்திறனைக் காட்டி வருகிறது. அவரது கேப்டன்சியில்தான் இந்திய தான் 2026 டி20 உலகக் கோப்பையிலும் களமிறங்க உள்ளது. ஆனால், தற்போது 34 வயதான சூரியகுமார் நீண்டகாலம் டி20 கேப்டனாக இருப்பது சாத்தியமில்லை. இந்த நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது திறமையை உறுதி செய்துள்ள சுப்மன் கில்லை அடுத்த டி20 கேப்டனாக பரிசீலிக்க வேண்டும் என முன்னாள் இந்திய வீரர் மற்றும் தேர்வாளர் தேவங் காந்தி பரிந்துரைத்துள்ளார்.
தேவங் காந்தியின் கருத்து
இது தொடர்பாக பேசிய தேவங் காந்தி, “2017ல் விராட் கோலி வெளிப்படுத்திய அதே ஒளியையும், மனப்பாங்கையும் கில் தற்போது வெளிப்படுத்தி வருகிறார். எம்.எஸ். தோனியின் கீழ் விராட் கோலி வளர்ந்தது போலவே, கிலும் தற்போது கேப்டன் பொறுப்பை மிகவும் நேர்மையாக ஏற்றுக்கொண்டு செயல்படுகிறார்,” என அவர் கூறினார்.
அவர் மேலும், “சுப்மன் கில்லை டெஸ்ட் கேப்டனாக நியமித்த அஜித் அகர்கர் சிறந்த தொலைநோக்குடன் செயல்பட்டார். அப்படியிருக்க, கில்லுக்கு டி20 கேப்டன்சியையும் வழங்காமல் இருக்க எந்த காரணமும் இல்லை. இந்தியாவில் ஸ்ப்லிட் (Split) கேப்டன்சி நீண்ட காலம் வேலை செய்யாது. ஒரே ஆல்-பார்மட் பிளேயரை பல்வேறு கிரிக்கெட் வடிவங்களிலும் தலைமை ஏற்கச் செய்வது திட்டமிடலில் நிலைத்தன்மையை வழங்கும்.
கில் பேட்ஸ்மேனாக அனைத்து கட்டங்களையும் வெற்றிகரமாக கடந்து விட்டார். மேலும், அவர் ஐபிஎல்-லிலும் கேப்டனாக அனுபவம் பெற்றுள்ளார். எனவே அனைத்து ஃபார்மெட்டிற்கும் அவரை கேப்டனாக நியமிக்கலாம்.” என்று தேவங் காந்தி தெரிவித்துள்ளார்.