மாஸ்கோ,
அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்ற பின்னர், 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் உக்ரைன்-ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வர மத்தியஸ்தம் செய்யும் முயற்சியில் டொனால்டு டிரம்ப் ஈடுபட்டு வருகிறார். இதற்காக புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பலமுறை பேசினார்.
இந்நிலையில், அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஆங்கரேஜ் நகரில் எல்மென்டார்ப்-ரிச்சர்ட்சன் கூட்டு ராணுவ படை தளத்தில் இன்று(15-ந்தேதி) அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் புதின் நேரில் சந்தித்து பேசுகின்றனர். இந்த சந்திப்பின் மூலம் ரஷியா-உக்ரைன் போருக்கு முடிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், டிரம்ப்-புதின் இடையிலான இந்த சந்திப்பு ஆக்கப்பூர்வமானதாக அமையும் என ரஷியா நம்பிக்கை தெரிவித்துள்ளது. இது குறித்து ரஷிய அரசின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், “டிரம்ப்-புதின் இடையிலான சந்திப்பு சுமார் 6 முதல் 7 மணி நேரம் வரை நீடிக்கும். இந்த சந்திப்பு ஆக்கப்பூர்வமானதாக அமையும் என நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.