டெல் அவிவ்,
இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. அப்போது, பலரை துப்பாக்கியால் சுட்டும், தாக்கியும் படுகொலை செய்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக சிறை பிடித்து செல்லப்பட்டனர்.
எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்து உள்ளது. இதற்காக தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்தியொன்றில், ஹமாஸ் பயங்கரவாதிகள் மனித குலம் நன்றாக அறிந்த, பாலியல் பலாத்காரம், கூட்டு பலாத்காரம், அந்தரங்க உறுப்புகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துதல், பணய கைதிகளிடம் பாலியல் துன்புறுத்துதலில் ஈடுபடுவது போன்ற பயங்கர பாலியல் குற்றங்களில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஈடுபட்டும் வருகின்றனர்.
இந்நிலையில், அதிகாரப்பூர்வ முறையில் ஹமாஸ் அமைப்பை ஐ.நா. அமைப்பு தடை செய்துள்ளது என அறிக்கை தெரிவிக்கின்றது. போர் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றில் ஈடுபட்ட குற்றச்சாட்டிற்காக, சர்வதேச சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
பணய கைதிகளிடம் ஹமாஸ் பயங்கரவாதிகள் பாலியல் துன்புறுத்துதலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் பாலியல் குற்றங்களை நிறுத்தவில்லை என்றும் இஸ்ரேல் அறிக்கை தெரிவிக்கின்றது. தொடக்கத்தில், ஐ.நா. பொது செயலாளர் அன்டோனியோ கட்டிரெஸ், இந்த நடவடிக்கைக்கு கடந்த ஆண்டு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.
விடுவிக்கப்பட்ட பணய கைதிகள், அதிர்ச்சியான தகவல்களை நினைவுகூர்ந்தனர். அவர்களின் அந்தரங்க பகுதிகளை தொட்டதுடன், கற்பழித்து விடுவோம், கட்டாய திருமணம் செய்து விடுவோம் என அவர்களை மிரட்டியுள்ளனர். மாதவிடாய் சுழற்சி பற்றிய கேள்விகளை கேட்பது போன்ற பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட்டனர் என அவர்கள் தெரிவித்தனர்.