லக்னோ,
உத்தரபிரதேசத்தின் மாவ் மாவட்டத்தின் கோட்வாலி பகுதியை சேர்ந்த விவசாயி ரோதஷியாம் மவுரியா (வயது 60). இவர் கலெக்டர் அலுவலகத்துக்கு ஒரு பாலித்தீன் பையுடன் வந்திருந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் இருந்ததால், அங்கிருந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். மேலும் அந்த பாலித்தீன் பையையும் சோதனையிட்டனர். அப்போது அதில் ஒரு சிறிய நல்ல பாம்பு இருந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், அது குறித்து மவுரியாவிடம் விசாரித்தனர். அப்போது, அந்த பாம்பை கலெக்டர் அலுவலகத்தில் விட்டுச்செல்ல வந்திருப்பதாக மவுரியா தெரிவித்தார்.
பின்னர் அதற்கான காரணத்தையும் போலீசாரிடம் கூறினார் அதாவது, அவரது மனைவி 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துள்ளார். இதனையடுத்து ரேஷன் கார்டில் இருந்து அவரது மனைவியின் பெயரை நீக்கும்போது மவுரியாவின் பெயரையும் அதிகாரிகள் நீக்கியுள்ளனர். இதற்காக மாவட்ட வட்ட வழங்கல் அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை. இதன் காரணமாக அவர் 2 ஆண்டுகளாக மன உளைச்சலில் இருந்துள்ளார். எனவே அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் பாம்புடன் கலெக்டர் அலுவலகம் வந்ததாக கூறினார்.
பின்னர் அந்த பாம்பை பறிமுதல் செய்த போலீசார், விவசாயியின் கோரிக்கைக்கு தீர்வு காண்பதாகவும் உறுதியளித்தனர். அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க விவசாயியின் விபரீத யோசனையால் மாவ் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.