புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைதான யூ டியூபர் ஜோதி மல்ஹோத்ரா மீதான குற்றச்சாட்டுக்கு வலுவான ஆதாரம் இருப்பதாக 2,500 பக்க குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிராவல் வித் ஜோ என்ற பெயரில் யூடியூப் நடத்தி வந்த ஹரியானாவைச் சேர்ந்த ஜோதி மல்ஹோத்ரா (33) பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, கடந்த மே மாதம் ஹரியானா போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக ஹிசார் நீதிமன்றத்தில் ஜோதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டது. இந்நிலையில், 2,500 பக்க குற்றப் பத்திரிகையை ஹிசார் நீதிமன்றத்தில் எஸ்ஐடி தாக்கல் செய்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது: டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரியாக இருந்த ஈசன்-உர்-ரஹிம் (எ) டேனிஷ் அலியுடன் ஜோதி தொடர்பில் இருந்துள்ளார். ஒரு முறை கர்த்தார்பூர் காரிடார் வழியாக பாகிஸ்தான் சென்ற அவர், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மகள் மரியம் நவாஸ் ஷெரீபை சந்தித்துப் பேசி உள்ளார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார். அப்போது அந்நாட்டு உளவு அமைப்பின் (ஐஎஸ்ஐ) அதிகாரிகளை சந்தித்துப் பேசி உள்ளார். அதன் பிறகு ஜூன் 10-ம் தேதி சீனாவுக்குச் சென்ற அவர், ஜூலை இறுதி வரை அங்கு இருந்துள்ளார். அதன் பிறகு நேபாளத்துக்கு சென்றுள்ளார்.
ஜோதி மல்ஹோத்ரா பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததற்கு வலுவான ஆதாரம் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, இந்தியா தொடர்பான ரகசிய தகவலை பாகிஸ்தான் முகவர்களிடம் ஜோதி பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் தனது யூடியூப் சேனலில் பாகிஸ்தான் ஆதரவான கருத்துகளை வெளியிட்டு வந்துள்ளார்.
அவருடைய செல்போனை ஆய்வு செய்ததில் டேனிஷ் அலியுடன் அடிக்கடி பேசியது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் உளவு அமைப்பைச் (ஐஎஸ்ஐ) சேர்ந்த ஷகிர், ஹசன் அலி மற்றும் நசிர் தில்லான் ஆகியோருடன் ஜோதி தொடர்பு வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி டேனிஷ் அலியுடன் ஜோதி மல்ஹோத்ரா தொடர்பில் இருந்தது தெரியவந்தது. மேலும் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி டேனிஷ் அலி அப்போது நாடு கடத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.