Sarfaraz Khan BCCI: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் பிரபலமான புச்சிபாபு கோப்பைக்கான அகில இந்திய அழைப்பு தொடர் (Buchi Babu Tournament) இன்று தொடங்கியது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் தொடங்கிய இத்தொடர் வரும் செப்டம்பர் 9ஆம் தேதிவரை நடைபெற உள்ளது.
Buchi Babu Tournament: மொத்தம் 16 அணிகள்
மொத்தம் 16 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. முதல் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற 3 அணிகளுடன் ஒருமுறை மோதும். இதன்பின், ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இறுதிப்போட்டி செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்கும்.
தமிழ்நாடு சார்பில் TNCA XI, TNCA Presidents XI என இரண்டு அணிகள் இடம்பெற்றுள்ளது. ஏ பிரிவில் TNCA Presidents XI, இமாச்சல் பிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா; பி பிரிவில் ரயில்வேஸ், ஜம்மு காஷ்மீர், பரோடா, ஒடிசா அணிகளும்; சி பிரிவில் TNCA XI, மும்பை, ஹரியானா, வங்காளம்; டி பிரிவில் ஹைதராபாத், பஞ்சாப், மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட் அணிகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு லீக் போட்டியும் 4 நாள்கள் நடைபெறுகின்றன.
Buchi Babu Tournament: பலமான நிலையில் மும்பை அணி
அந்த வகையில், ஷாருக்கான் தலைமையிலான TNCA XI – ஆயுஷ் மாத்ரே தலைமையிலான மும்பை அணிகள் மோதும் போட்டி திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே உள்ள கோஜன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் மும்பை அணி 85 ஓவர்கள் பேட்டிங் செய்து 5 விக்கெட்டுகளை இழந்து 367 ரன்களை அடித்துள்ளது. முஷிர் கான் 30, ஆயுஷ் மாத்ரே 13, சுவேத் பர்கார் 72, ஹர்ஷ் ஆகவ் 2, ஆகாஷ் ஆனந்த் 14 ரன்களை அடித்து ஆட்டமிழந்தனர். தற்போது ஆகாஷ் பர்கார் 67 ரன்களுடனும், ஹிமான்ஷூ சிங் 20 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
Buchi Babu Tournament: சர்பராஸ் கான் மிரட்டல் சதம்
மும்பை அணியில் நட்சத்திர வீரர் சர்பராஸ் கானும் விளையாடினார். அவர் 92 பந்துகளுக்கு சதம் அடித்து மிரட்டினார். மேலும், 114 பந்துகளுக்கு 138 ரன்களை அடித்தபோது சர்பராஸ் கான் ரிட்டையர்ட் ஹர்ட் மூலம் வெளியேறினார். அவர் அடித்த 138 ரன்களில் 10 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் அடக்கம். இவர் நாளை பேட்டிங் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்பராஸ் கானின் இந்த அதிரடி ஆட்டம் பிசிசிஐக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.
இந்திய அணி கடைசியாக அந்நிய மண்ணில் மேற்கொண்ட ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது சர்பராஸ் கானுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் அவருக்கு ஸ்குவாடில் இடம்கிடைத்தது, ஆனால் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ஸ்குவாடில் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை.
Sarfaraz Khan: இனி ஓரங்கட்ட முடியாது..
இந்தச் சூழலில், அடுத்த இந்திய மண்ணில் நடைபெறும் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் சர்ஃபராஸ் கானை புறக்கணிக்கவே முடியாது என நிலை உருவாகி உள்ளது. இன்று கூட இடதுகை சுழற்பந்துவீச்சாளர் அஜித் ராமை சர்ஃபராஸ் கான் வெளுத்தெடுத்தார். சர்பராஸ் கான் இதுவரை 11 இன்னிங்ஸ்களில் விளையாடி 371 ரன்களை அடித்துள்ளார், இதில் 3 அரைசதம், 1 சதம் அடக்கம்.
About the Author
Sudharsan G