மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த். அந்த காலகட்டத்தில் தோனியுடன் நல்ல நட்பு கொண்ட வீரர்களில் இருவரும் ஒருவர். மிகவும் திறமையான வேகப்பந்து வீச்சாளராக அறியப்பட்ட அவர் களத்தில் ஆக்ரோஷம் காட்டும் குணமுடையவர்.
மகேந்திரசிங் தோனி தலைமையில் 2007 டி20 மற்றும் 2011 ஒருநாள் உலகக்கோப்பைகளை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். குறிப்பாக 2007 டி20 உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 ஓவர்கள் பந்துவீசி 12 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அதில் மேத்யூ ஹெய்டனை கிளீன் போல்டாக்கிய அவர் தரையில் 3 முறை குத்தி வித்தியாசமாக கொண்டாடியது இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் பல ஆண்டுகளுக்கு முன்பு தோனி தன்னை “காதலி” குறித்து கிண்டலடித்ததன் பின்னணி என்ன என்பதை ஸ்ரீசாந்த் சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
இந்தச் சம்பவம் 2010-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது நடந்தது. பிரக்யான் ஓஜா பந்துவீசிக்கொண்டிருந்தபோது, பீல்டிங்கில் நின்றுகொண்டிருந்த ஸ்ரீசாந்தை தோனி ஸ்டம்புக்குப் பின்னாலிருந்து சத்தமாகக் கிண்டலடித்தார்.
பீல்டிங் பகுதிக்கு சரியாகச் செல்லும்படி அறிவுறுத்திய தோனி, “உன் காதலி அங்கே இல்லை, இங்கே வா” என்று கூறியது அந்த சமயத்தில் மிகவும் வைரலானது.
இந்நிலையில் தோனி ஏன் அப்படி கூறினார்? என்பது குறித்து 15 வருடங்களுக்கு பின்னர் ஸ்ரீசாந்த் விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:– “அந்த நாட்களில் எனக்கு நிறைய காதலிகள் இருந்தனர். அதனால், நான் செல்லும் ஒவ்வொரு மைதானத்திலிருந்தும் ஒரு காதலியை பிடித்து விடுவேன் என்று தோனி நினைத்திருக்கலாம். என்னுடைய உண்மையான திறமை என்ன என்பதை எனக்குப் புரிய வைத்த ஒரே கேப்டன், ஒரே நண்பர் தோனிதான்” என்று கூறினார்.