கலிபோர்னியா,
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சான் டீகோ நகரில் வசித்து வருபவர் பிரிட்னி மே லையான் (வயது 31). ஆன்லைனில் தன்னை, குழந்தைகளை பராமரிக்கும் நபராக காட்டி கொண்டார். இதனை நம்பி, வேலைக்கு செல்லும் பெற்றோர் மற்றும் வேறு சிலர் தங்களுடைய குழந்தைகளை இவரிடம் விட்டு, விட்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில், 7 வயது சிறுமி லையானுடன் செல்லமாட்டேன் என அதன் தாயாரிடம் அழுதுள்ளது. இதனால், சந்தேகமடைந்த அந்த பெற்றோர் சிறுமியை மெல்ல விசாரித்ததில் அதிர்ச்சி தகவல் வெளியானது.
லையான், அவருடைய காதலரான சாமுவேல் கேப்ரீரா (வயது 31) என்பவரிடம் சிறுமியை அனுப்பி வைத்துள்ளார். சாமுவேல் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். சாமுவேலின் கணினியில் பலாத்காரத்துடன் தொடர்புடைய நூற்றுக்கணக்கான வீடியோக்கள் இருந்துள்ளன.
இதனை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இதில், சில குழந்தைகள் ஆட்டிசம் பாதித்தவர்கள் ஆவர். அவர்கள் சிறப்பு கவனத்துக்கு உரியவர்கள். ஆனால், அவர்களை காதலருக்கு பாலியல் விருந்தாக்கிய லையான், கடந்த காலங்களிலும் வேறு சில குற்ற சம்பவங்களில் ஈடுபட்டது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
லையான் மற்றும் சாமுவேல் இருவரும் பள்ளியில் படிக்கும்போது அறிமுகம் ஆனவர்கள். இதன்பின்னர், உடைமாற்றும் அறையில், பெண்களுக்கு தெரியாமல் அவர்களை ரகசிய வீடியோ எடுக்க சாமுவேல், லையானை பயன்படுத்தி இருக்கிறார். இதற்காக சாமுவேலுக்கு, 2021-ம் ஆண்டு பரோல் இல்லாத சிறை தண்டனை அளிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், 3 முதல் 7 வயது வரையிலான பல சிறுமிகளை சாமுவேல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தெரிய வந்துள்ளது. மாற்றுத்திறனாளியான குழந்தைகளை, காதலன் பாலியல் பலாத்காரம் செய்ய உதவிய வழக்கில் லையானுக்கு 100 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
எனினும், அந்நாட்டு சட்டத்தின்படி 20 ஆண்டுகள் சிறையில் இருந்த பின்னர், பொதுவாக குற்றவாளியை விடுவிக்கும் நிகழ்வே அதிகம் காணப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் உள்ளது.