ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டம் சசோட்டி என்ற கிராமத்தில் கடந்த 14-ம் தேதி மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம் ஏற்பட்டது. இதில் சசோட்டி கிராமத்தின் பெரும் பகுதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. பலர் உயிருடன் மண்ணில் புதையுண்டனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மேலும் 4 பேரின் உடல்கள் மற்றும் துண்டிக்கப்பட்ட இரு கால்கள் மீட்கப்பட்டதை தொடர்ந்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளத்தில் காயம் அடைந்தவர்கள் 30 கி.மீ. தொலைவில் அத்தோலியில் உள்ள மாவட்ட துணை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இங்குள்ள மருத்துவர்கள் கூறுகையில், “வெள்ளம் முற்றிலும் வடிந்துள்ளதால் இறந்தவர்களின் உடல் பாகங்கள் ஆங்காங்கே தென்படுகின்றன. முழுமையான உடல் கிடைத்தால் உறவினர்கள் அதனை கொண்டுசென்று இறுதிச் சடங்குகள் செய்ய முடியும். ஆனால் கை, கால்கள் என தனித்தனியாக கிடைக்கின்றன. எனவே இவற்றை டிஎன்ஏ பரிசோதனைக்காக நாங்கள் ஜம்முவுக்கு அனுப்பி வருகிறோம்” என்றார்.