புதுடெல்லி,
சிங்கப்பூரில் வசித்து வரும் ஒருவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். அவருடைய மனைவி அவரை பிரிந்து ஐதராபாத்தில் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கிடையே, இளைய மகனின் பிறந்தநாள் 23-ந் தேதி வருவதால், அதை கொண்டாட கணவர் இந்தியா வந்துள்ளார். பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்க உத்தரவிடக்கோரி அவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு, நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அப்பெண், காணொலி காட்சி மூலம் கோர்ட்டில் ஆஜரானார். அவரிடம், கணவர்-மனைவி இருவரும் தங்களது பிரச்சினைகளை பேசித்தீர்க்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர். அந்த பெண், தனது கணவர் பிரச்சினைக்கு தீர்வு காண விரும்பவில்லை என்றும், தனக்கு ஜீவனாம்சம் கூட அளிக்கவில்லை என்றும் கூறினார்.
நீதிபதிகள், ‘‘நீங்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு சிங்கப்பூரில் கணவருடன் வாழ்வதில் என்ன பிரச்சினை?’’ என்று கேட்டனர். அதற்கு அப்பெண், ‘‘கணவரின் செயல்பாடுகளை பார்த்தால், அவருடன் சிங்கப்பூரில் வாழ்வது கடினம். வாழ்வாதாரத்துக்கு வேலை தேவை’’ என்று கூறினார்.
நீதிபதிகள், ‘‘வேலை கிடைக்கிறதோ, இல்லையோ நீங்கள் அங்கு சென்றால் உங்களை அவர் பராமரிக்க வேண்டும். தேவைப்பட்டால், உங்களுக்கும், உங்கள் குழந்தைகளுக்கும் பணம் டெபாசிட் செய்யுமாறு கணவரிடம் கேட்கலாம்’’ என்று கூறினர். அந்த பெண்ணோ, ‘‘நான் யாரையும் சார்ந்திருக்க விரும்பவில்லை’’ என்று கூறினர்.
அப்போது நீதிபதிகள் அவருக்கு அறிவுரை கூறினர். அவர்கள் கூறியதாவது:-
எங்களை பழைய ஆள் என்று நினைத்தாலும் பரவாயில்லை. திருமண உறவு நீடிக்கும்போது, கணவரோ, மனைவியோ தாங்கள் அடுத்தவரை சார்ந்திருக்க விரும்பவில்லை என்று சொல்வது சாத்தியமில்லை. யாராவது சுதந்திரமாக இருக்க விரும்பினால் அவர்கள் திருமணமே செய்திருக்கக்கூடாது.
திருமணம் என்பது இரண்டு ஆன்மாக்கள் ஒன்று சேருவது. பிறகு எப்படி நீங்கள் சுதந்திரமாக இருக்க முடியும்?. நீங்கள் இருவரும் ஒன்று சேர்ந்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம். குழந்தைகள் வேறு சிறிய வயதில் உள்ளனர். அவர்கள் உடைந்த குடும்பத்தை பார்க்க வேண்டுமா? அவர்கள் என்ன தவறு செய்தனர்? இவ்வாறு நீதிபதிகள் கூறினர். அந்த பெண், இதுபற்றி சிந்திப்பதாக தெரிவித்தார்.