பிசிசிஐ தேர்வுக்குழுவில் மாற்றம்… உள்ளே வரும் இந்த Ex இந்திய வீரர்?

India National Cricket Team: இந்திய கிரிக்கெட் என்றில்லை, உலக கிரிக்கெட்டில் ரசிகர்களால் அதிகம் விமர்சிக்கப்படுபவர்கள் யார் என்றால் அது அணித் தேர்வாளர்கள்தான். அதிலும் இந்திய அணியின் தேர்வாளர்கள் தொடர் தலைவலியில் இருப்பார்கள் எனலாம்.

Team India: ரசிகர்களின் விமர்சனங்கள்

ஆசிய கோப்பை 2025 தொடரின் இந்திய அணி ஸ்குவாட் சில நாள்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. 15 வீரர்கள் கொண்ட ஸ்குவாட் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரும்பாலானோருக்கு இந்திய அணியின் தேர்வில் கடும் விமர்சனங்கள் இருந்தன. குறிப்பாக ஷ்ரேயாஸ் ஐயர், யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு ஏன் வாய்ப்பளிக்கவில்லை என்றும் சிவம் தூபே, ஹர்ஷித் ராணாவுக்கு வாய்ப்பளித்தது ஏன் என்றும் கேள்விகள் எழுந்தன. 

சுப்மான் கில்லின் தேர்வும் கூட கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளானது. சுப்மான் கில்லை துணை கேப்டனாகவும் அறிவித்திருப்பதால் அவர் நிச்சயம் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார். அவர் பெரும்பாலும் ஓபனிங்கில்தான் விளையாடுவார் என்பதால் சஞ்சு சாம்சனுக்கு ஓபனிங் ஸ்பாட் மட்டுமின்றி பிளேயிங் லெவனிலும் இடம் கிடைக்காது என்ற நிலை எழுந்திருக்கிறது. இந்த முடிவும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது.

Team India BCCI: தேர்வுக்குழுவில் மாற்றம்

இந்தச் சூழலில், இந்திய ஆடவர் சீனியர் அணியின் தேர்வுக்குழுவில் மாற்றம் ஏற்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழுவில் 4 உறுப்பினர்கள் உள்ளனர். மத்திய மண்டல உறுப்பினராக சிவ் சுந்தர் தாஸ், கிழக்கு மண்டல உறுப்பினராக சுப்ரதோ பானர்ஜி, வடக்கு மண்டல உறுப்பினராக அஜய் ராத்ரா, தெற்கு மண்டல உறுப்பினராக ஸ்ரீதரன் ஷரத் ஆகியோர் உள்ளனர். அஜித் அகர்கர் மேற்கு மண்டலத்தை கவனித்துக்கொள்கிறார்.

Team India BCCI: தேர்வுக்குழு உறுப்பினரின் தகுதிகள்

இதில் தெற்கு மண்டல உறுப்பினர் ஸ்ரீதரன் ஷரத்தின் பதவிக்காலம் நிறைவடைகிறது. மேலும், மத்திய மண்டல உறுப்பினரும் புதிதாக தேர்வு செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. தேர்வுக்குழுவில் இடம்பிடிப்பதற்கு சில தகுதிகளும் வேண்டும். அதாவது, ஒருவர் இந்திய அணிக்காக 7 டெஸ்ட் போட்டிகள் அல்லது 30 முதல் தர போட்டிகளில் விளையாடியிருக்க வேண்டும். மறுபுறம், 10 ஓடிஐ போட்டிகள் மற்றும் 20 முதல் தர போட்டிகளில் விளையாடியவர்களும் தேர்வுக்குழுவில் உறுப்பினர்களாக இடம்பெறலாம்.

Team India BCCI: 2 பொறுப்புகளுக்கு விண்ணப்பங்கள் 

இந்நிலையில், தற்போது தேர்வுக்குழுவின் இரண்டு உறுப்பினர்களுக்கு பிசிசிஐ தற்போது விண்ணப்பங்களை வரவேற்று வருகிறது. செப்டம்பர் 10ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். ஆனால் எந்தெந்த பொறுப்புக்கு, எந்த மண்டலத்திற்கு புதிய உறுப்பினர்கள் எடுக்கப்பட இருக்கிறார்கள் என்பதை பிசிசிஐ தெரிவிக்கவில்லை. தெற்கு மற்றும் மத்திய மண்டல உறுப்பினர்கள் மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Team India BCCI: பிரக்யான் ஓஜா…?

தெற்கு மண்டலத்தின் உறுப்பினர் ஸ்ரீதரன் ஷரத்திற்கு பதில் ஓய்வுபெற்ற இந்திய வீரர் பிரக்யான் ஓஜா சேர்க்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரக்யான் ஓஜா, இந்திய அணிக்காக 24 டெஸ்ட் போட்டிகள், 18 ஓடிஐ போட்டிகள், 6 டி20ஐ போடடிகளில் விளையாடி உள்ளார். மேலும் 108 முதல்தர போட்டிகளிலும் விளையாடியிருக்கிறார்.

பிசிசிஐ தரப்பில் ஒருவர் ஊடகம் ஒன்றில் பேசுகையில், “தேர்வுக்குழு உறுப்பினர்களின் ஒப்பந்தம் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்படும். தற்போதைய சூழலில் எந்த உறுப்பினர் மாற்றப்பட உள்ளார் என்பது தெரியவில்லை, ஆனால் அதற்கான செயல்பாடுகள் விரைவில் தொடங்க உள்ளது” என்றார். 

About the Author

Sudharsan G

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.