Indra Review: உளவியல் கோணத்துடன் மிரட்டும் சீரியல் கில்லர் கதை; ஐடியா ஓகே, திரைக்கதை?!

சென்னையில் அபி (சுனில்) தொடர் கொலைகள் செய்கிறார். கொலைகளைச் செய்து விட்டு சடலத்திலிருந்து வலது கை மணிக்கட்டை வெட்டி எடுக்கிறார். மறுபுறம், மதுபோதையில் விபத்து ஏற்படுத்தியதால் இடைநீக்கம் செய்யப்பட்டு, மீண்டும் பணியில் சேர போராடிக் கொண்டிருக்கிறார் காவல்துறை ஆய்வாளர் இந்திரா (வசந்த் ரவி). இந்த மன அழுத்தத்தால் குடிக்கு அடிமையாகிறார். அதனால், அவரின் கண் பார்வை பறிபோகிறது.

இந்நிலையில், இந்திராவின் குடும்பத்தில் ஒரு கொலை நிகழ்கிறது. தொடர் கொலைகள் செய்யும் அபியின் பாணியில் கொலை நிகழ்ந்திருப்பதை அறியும் இந்திரா, அவரைக் கண்டுபிடிக்கக் களமிறங்குகிறார். அபியைக் கண்டுபிடித்தாரா, இந்திராவின் வீட்டில் நிகழ்ந்த கொலைக்குக் காரணம் என்ன போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருக்கிறது அறிமுக இயக்குநர் சபரீஷ் நந்தா இயக்கியிருக்கும் ‘இந்திரா’.

Indra Review

மன அழுத்தத்தில் உழல்வது, மது போதையில் களைத்திருப்பது, பார்வை இழந்த வேதனையோடு, பிரச்னைகளைக் கையாள முடியாமல் பதறித் திணறுவது, அதிகாரத் திமிரில் ஆக்ரோஷம் கொள்வது, காதலில் உருகுவது என ஆழமும், அகலமுமான கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியிருக்கிறார் வசந்த் ரவி. ஆனாலும், சில காட்சிகளில் நடிப்பில் அதீதம் எட்டிப் பார்க்கிறது. தன் உடல்மொழியால் சீரியல் கில்லர் கதாபாத்திரத்தைக் கவனிக்க வைத்திருக்கிறார் சுனில். ஆங்காங்கே ஓவர்டோஸ் ஆனாலும், சுமேஷ் மூரின் உருட்டலும் மிரட்டலும் தேவையான பதற்றத்தைக் கொடுத்திருக்கிறது. கடத்த வேண்டிய பரிதாபத்தைக் கடத்தியிருக்கிறது அனிகா சுரேந்திரனின் நடிப்பு. மெஹ்ரீன் பிர்சாடா, கல்யாண், ராஜ்குமார் ஆகியோர் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள்.

த்ரில்லர் படத்திற்கான இறுக்கத்தையும், இரவுநேரக் காட்சிகளின் ஒளியமைப்பில் நேர்த்தியையும் கொண்டுவந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரபு ராகவ். ஒரே வீட்டிற்குள் நடக்கும் காட்சித்தொகுப்புகளைக் கூர்மையாக்கி, சுவாரஸ்யமேற்ற முயன்றிருக்கிறார் படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல். பரபர காட்சிகளையும் உணர்வுபூர்வமான காட்சிகளையும் மெருகேற்றும் பணியில் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது அஜ்மல் தஸ்சீனின் பின்னணி இசை. த்ரில்லர் மோடில் மட்டுமல்லாமல், வசந்த் ரவியின் மனப் போராட்டங்களையும் வெளிப்படுத்தும் இடங்களிலும் வரும் கச்சிதமான ஒலி வடிவமைப்பு கவனிக்க வைக்கிறது.

Indra Review

தொடர் கொலைகள் செய்யும் சுனில், மீண்டும் பணியில் சேர அலையும் வசந்த ரவி, கொலை வழக்கை விசாரிக்கும் கல்யாண் ஆகிய கதாபாத்திரங்களின் அறிமுகங்களோடு, உளவியல் தடுமாற்றங்களையும் பேசி பரபரவென தொடங்குகிறது திரைக்கதை. ஆனால், சிறிது நேரத்திலேயே காதல், பாடல் என வேகம் மட்டுப்பட்டு, பிரதான கதையை நோக்கி நகராமல் தடுமாறுகிறது திரைக்கதை. காவல்துறையின் விசாரணை காட்சிகளும் தேவையான புத்திசாலித்தனத்தோடு விறுவிறுப்பைக் கூட்டத் தவறுகிறது. திரைக்கதையைச் வலுப்படுத்த கிளைக்கதைகள், அடுக்குகள் இல்லாததும் சிறிது அலுப்பைத் தருகிறது. தொழில்நுட்ப ஆக்கம் ஆறுதல் தர, எதிர்பாராத இடைவேளை திருப்பமும், வசந்த் ரவியின் நடிப்பும் முதற்பாதியைக் காப்பாற்றுகின்றன.

இடைவேளைக்குப் பிறகு இறுதிக்காட்சி வரை யூகித்த ரூட்டிலேயே நடைபோடுகிறது இரண்டாம் பாதி. டிரெய்லர், போஸ்டர்கள் பார்த்தே கதையை கணிக்குமளவுக்கு அவை பலவீனமாக இருப்பதும் ஏமாற்றமே! அதிலும் இரண்டாம் பாதிக்கு வலுசேர்க்கும் பின்கதையும் பழக்கமான கதையாக நீள்வதோடு, சுவாரஸ்யமில்லாமல் தட்டையாக விவரிக்கப்பட்டிருக்கிறது. அதனால், அக்காட்சிகள் கடத்த வேண்டிய எமோஷன் நம் மனங்களை எட்டவில்லை. அதீத வன்முறைகளுடன் நீளும் இறுதிக்காட்சியில், ‘குற்றத்தையும் தண்டனையையும்’ விவாதிக்கும் உணர்வுபூர்வமான உரையாடல்களும், பிரதான கதாபாத்திரங்களின் முடிவும் ஓரளவிற்கு மட்டுமே ஆறுதல் தருகின்றன.

Indra Review

உளவியல் போராட்டம், சீரியல் கில்லர், பார்வையற்ற போலிஸ் என ஐடியாவாக கவர்ந்தாலும், காட்சிகளில் போதுமான சுவாரஸ்யமும், கதையில் தேவையான திருப்பங்களும் இல்லாததால், ஒரு க்ரைம் த்ரில்லராக ஜஸ்ட் பாஸ் மட்டுமே ஆகிறது இந்த `இந்திரா’.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.