சென்னை: தமிழகத்தில் சில இடங்களில் இன்று முதல் 28-ம் தேதி வரை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஒடிசா – மேற்கு வங்கம் இடையே கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று ஒரு காற்றழுத்ததாழ்வு பகுதி உருவாகக்கூடும். தவிர, மேற்கு திசை காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 30-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று ஓரிரு இடங்களிலும், நாளை முதல் 28-ம் தேதி வரை சில இடங்களிலும் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை 82 முதல் 97 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும்.
தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் 5 செ.மீ.,ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.