மெல்போர்ன்,
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் அருகே அரசு ஆஸ்பத்திரி ஒன்று உள்ளது. இந்த ஆஸ்பத்திரி கழிவறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டு இருந்ததை பெண் டாக்டர்கள் கண்டறிந்தனர். இதுகுறித்து ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதுதொடர்பாக அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அதே ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வரும் ரயான் சோ (வயது 28) என்ற டாக்டர் இரவு நேரத்தில் கழிவறைக்குள் சென்று வருவதை கண்டு பிடித்தனர். சிங்கப்பூர் வம்சாவளியை சேர்ந்தவரான அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
அப்போது அவருடைய சல்லாப புத்தி காரணமாக ஆஸ்பத்திரி கழிவறையில் ரகசிய கேமரா பொருத்தி ஆபாச படம் எடுத்ததை அவர் ஒப்புக்கொண்டார். 2021-ம் ஆண்டு பயிற்சி டாக்டராக பணியில் சேர்ந்ததில் இருந்து இதில் ஈடுபட்டுள்ளார். அவருடைய செல்போன் மற்றும் மடிக்கணினிகளில் இருந்த 4,500 வீடியோக்கள் கைப்பற்றப்பட்டன. அவர் கைது செய்யப்பட்டநிலையில் அவருடைய சிங்கப்பூர் பாஸ்போர்ட்டை முடக்கினர். தற்போது ரூ.28 லட்சம் பிணைத்தொகை செலுத்தப்பட்டதன்பேரில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.