பெங்களூரு,
கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் அஜ்ஜாம்புரா தாலுகா சிவனி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40). இவரது மனைவி அஸ்வினி (34). இந்த தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். ரமேஷ், மனைவி, குழந்தைகள் மற்றும் தந்தை மல்லேஷ், தாய் தேவிரம்மா (75) ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி தேவிரம்மா உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். மறுநாள் வீட்டில் இருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், ரூ.65 ஆயிரம் ரொக்கம் ஆகியவை மாயமாகி இருந்தது. தனது தாயின் சாவில் சந்தேகம் இருப்பதாக தேவிரம்மாவின் மகள் வீணா, அஜ்ஜாம்புரா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் அஸ்வினியின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது இதனால் போலீசார் அஸ்வினியை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது மாமியார் தேவிரம்மாவை கொலை செய்ததை அஸ்வினி ஒப்புக் கொண்டார். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதாவது, அஸ்வினிக்கும் அதே கிராமத்தை சேர்ந்த ஆஞ்சநேயா (26) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஆஞ்சநேயாவை வரவழைத்து அஸ்வினி உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த தங்க நகைகளை ஒவ்வொன்றாக திருடி ஆஞ்சநேயாவிடம் அஸ்வினி கொடுத்து வந்தார்.
இதையடுத்து அஸ்வினியின் நடத்தையில் தேவிரம்மாவுக்கு சந்தேகம் எழுந்தது. இதனால் கள்ளக்காதலை மறைக்க அவரை தீர்த்துக்கட்ட கள்ளக்காதலன் ஆஞ்சநேயாவுடன் சேர்ந்து அஸ்வினி திட்டம் தீட்டி உள்ளார். அதன்படி கடந்த 10-ந்தேதி கணவர் மற்றும் மாமனாருக்கு உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து தூங்க வைத்துள்ளார். பின்னர் மாமியார் தேவிரம்மாவுக்கு ராகி உருண்டையில் தூக்க மாத்திரையுடன் விஷம் கலந்துகொடுத்துள்ளார்.
இதனை சாப்பிட்ட தேவிரம்மா வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். பின்னர் அஸ்வினி, மாமியார் தேவிரம்மாவுக்கு உடல் நிலை சரியில்லை என அக்கம்பக்கத்தினரிடம் நாடகமாடி உள்ளார். பின்னர் கள்ளக்காதலன் ஆஞ்சநேயாவை காருடன் வரவழைத்து மாமியார் தேவிரம்மாவை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதாக கூறி புறப்பட்டார். ஆனால், ஆஸ்பத்திரிக்கு செல்லாமல் இரவு முழுவதும் காரிலேயே ஊரை சுற்றி உள்ளனர்.
பின்னர் தேவிரம்மா இறந்ததை உறுதி செய்த அவர்கள், ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தேவிரம்மாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் வீட்டுக்கு வந்து மாமியார் இறந்துவிட்டதாக அழுது புலம்பி அனைவரையும் நம்ப வைத்துள்ளார். இதற்கிடையே தான், நகை-பணம் திருட்டு குறித்து ரமேசின் தங்கை வீணா கேட்டபோது தனக்கு எதுவும் தெரியாது என அஸ்வினி தெரிவித்துள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த வீணா, போலீசில் புகார் கொடுத்தார். அதன்பிறகு போலீசார் நடத்திய விசாரணையில் இந்த கொலை நாடகம் அம்பலமானது. இதையடுத்து போலீசார், அஸ்வினி மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆஞ்சநேயா ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.