ஐபிஎல் 2025 மற்றும் சாம்பியன்ஸ் டிராபியில் சிறப்பாக விளையாடிய இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி மிடில்-ஆர்டர் பேட்ஸ்மேனான ஸ்ரேயாஸ் ஐயர் வரவிருக்கும் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறாமல் போனது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சுப்மான் கில் அணியில் இடம் பெற்றுள்ள நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் ஏன் இடம் பெறவில்லை என்று பலரும் கேள்வி எழுப்பினர். தனக்கு நிச்சயம் ஆசிய கோப்பையில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், உள்ளூர் தொடரில் கேப்டன் பதவியை ஏற்க மறுத்துள்ளார் ஷ்ரேயாஸ் ஐயர். ஆனால் இறுதியில் ஆசிய கோப்பை அணியில் அவர் இடம் பெறாமல் போனதால் சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கேப்டன் பதவியை நிராகரித்த ஸ்ரேயாஸ் ஐயர்
வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி தொடங்கவிருக்கும் துலீப் டிராபி உள்நாட்டு கிரிக்கெட் தொடரில், மேற்கு மண்டல அணிக்கு தலைமை தாங்கும் வாய்ப்பு, முதலில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு தான் வழங்கப்பட்டது. மேற்கு மண்டல தேர்வாளர்கள் அவரை கேப்டனாக இருக்க கேட்டு கொண்டபோது, ஆசிய கோப்பை டி20 அணியில் தான் தேர்ந்தெடுக்கப்படுவேன் என்ற எதிர்பார்ப்பில், அந்த வாய்ப்பை ஐயர் நிராகரித்துவிட்டார். அவர் மறுத்ததை தொடர்ந்து, அந்த வாய்ப்பு ஷர்துல் தாக்கூருக்கு வழங்கப்பட்டது. அவரும் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டுள்ளார்.
அணியில் இடமில்லை
சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியன் பிரீமியர் லீக் தொடரில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர், தனது அபாரமான ஆட்டத்தால் 11 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த அணியை இறுதி போட்டிக்கு அழைத்து சென்றார். மேலும் இந்த ஐபிஎல் தொடரில் 175 ஸ்ட்ரைக் ரேட்டில், 604 ரன்களை குவித்தார். இவ்வளவு சிறப்பாக செயல்பட்ட போதிலும், 15 பேர் கொண்ட ஆசிய கோப்பை அணியில் அவரது பெயர் இடம் பெறவில்லை. மேலும், 5 பேர் கொண்ட மாற்று வீரர்கள் பட்டியலிலும் கூட அவரது பெயர் சேர்க்கப்படாதது, பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வலுக்கும் கண்டனங்கள்
சிறந்த ஃபார்மில் இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயரை போன்ற ஒரு திறமையான வீரரை, ஆசிய கோப்பை அணியிலிருந்து நீக்கிய அஜீத் அகர்கர் தலைமையிலான தேர்வு குழுவின் முடிவுக்கு, பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், கிரிக்கெட் விமர்சகர்களும் தங்களது கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், சுப்மன் கில்லுக்கு அணியில் இடமளிப்பதற்காக, ஸ்ரேயாஸ் ஐயருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று கடுமையாக விமர்சித்துள்ளார். ஆசியக் கோப்பைக்கான டி20 அணியில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான், ஸ்ரேயாஸ் ஐயர் தனது தனிப்பட்ட பயிற்சியாளர் பிரவீன் அம்ரேயுடன் இணைந்து, தீவிர பயிற்சிகளை மேற்கொண்டிருந்தார்.
தற்போது, கேப்டன் பதவியை நிராகரித்தாலும், அவர் துலீப் டிராபி தொடரில் ஒரு வீரராக களமிறங்க உள்ளார். மேற்கு மண்டல அணி, தனது அரையிறுதி போட்டியில், செப்டம்பர் 4 முதல் 7 வரை, பெங்களூருவில் விளையாட உள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் கடைசியாக 2024 ஆம் ஆண்டு, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியாவிற்காக விளையாடினார். அதன் பிறகு, ரஞ்சி டிராபியில் மும்பை அணிக்காக விளையாட தவறியதால், பிசிசிஐ-யின் மத்திய ஒப்பந்த பட்டியலிலிருந்து நீக்கப்பட்டார். ஆனால், சில மாதங்களுக்கு மீண்டும் ஒப்பந்த பட்டியலில் சேர்க்கப்பட்டார்.
About the Author
RK Spark