பாதியில் வெளியேறும் Dream 11, My11Circle… பிசிசிஐ உடன் எத்தனை கோடிக்கு ஒப்பந்தம்?

Team India Title Sponsorship: கடந்த வாரம் ஆன்லைன் கேமிங்கை தடை செய்யும் வகையிலான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறிய நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கையெழுத்திட்டதும் அது சட்டமாக மாறியிருக்கிறது. இந்த சட்டம் பணம் சார்ந்த விளையாட்டுகளை முற்றிலும் தடைசெய்கிறது. 

Team India: வெளியேறிய Dream 11

இதனால், ஆன்லைனில் பணம் செலுத்தி விளையாடும் ரம்மி செயலிகள் பெரும் தடையை சந்தித்துள்ளன. குறிப்பாக, பெட்டிங் செயலியான Dream 11 நிறுவனமும் இந்த தடைச் சந்திக்கிறது எனலாம். அந்த வகையில், இந்திய அணியின் டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப்பில் இருந்து வெளியேறுவதாக Dream 11 அறிவித்துள்ளது.

Team India: ரூ.358 கோடி ஒப்பந்தம்

கடந்த 2023ஆம் ஆண்டில் Bjyu’s நிறுவனம் பெரும் இழப்பைச் சந்தித்தை தொடர்ந்து, இந்திய அணியின் டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப்பை துறந்தது. அப்போது முதல் Dream 11 நிறுவனம் இந்திய அணியின் டைட்டில் ஸ்பான்ஸராக இருந்து வருகிறது. ரூ.358 கோடி அல்லது ஒரு உள்நாட்டு போட்டிக்கு ரூ.3 கோடி மற்றும் ஒரு வெளிநாட்டு போட்டிக்கு ரூ.1 கோடி என்ற வீதத்தில் பிசிசிஐ உடன் Dream 11 இந்த டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப்பை போட்டிருந்தது. 2026ஆம் ஆண்டுவரை பிசிசிஐ உடன் இருந்த ஒப்பந்தம் தற்போது முன்கூட்டியே முடிவுக்கு வந்துள்ளது. 

Team India: இந்திய அணிக்கு ஸ்பான்ஸரே இல்லை…

தற்போது இந்திய அணியின் டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப்பில் இருந்து Dream 11 விலகியதை அடுத்து யார் அந்த இடத்தை பிடிக்கப்போகிறார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அது ஒருபுறம் இருக்க, இந்திய அணி விரைவில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஆசிய கோப்பை தொடரில் விளையாட இருக்கிறது. இந்திய அணி அதன் முதல் போட்டியை செப். 10ஆம் தேதி விளையாடுகிறது. செப். 28ஆம் தேதிவரை அந்த தொடர் நடைபெறும் எனலாம். 

இந்தச் சூழலில், ஆசிய கோப்பை தொடரின்போது இந்திய அணியின் ஜெர்ஸியில் டைட்டில் ஸ்பான்ஸர் பெயரே இருக்காது என தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்னும் ஆசிய கோப்பை தொடங்க சில வாரங்களே உள்ள நிலையில், வேறு ஸ்பான்ஸ்ர்ஷிப் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இன்னும் காலமாகும் என்பதால் பிசிசிஐ இந்த முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

Team India: பிசிசிஐ அறிவிப்பு

பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா, Dream 11 நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து ஊடகத்தில் அவர் பேசுகையில், “ஆன்லைன் கேமிங் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, பிசிசிஐ மற்றும் Dream 11 தங்கள் உறவை முறித்துக்கொள்கின்றன. எதிர்காலத்தில் இதுபோன்ற எந்தவொரு அமைப்புகளுடனும் பிசிசிஐ ஈடுபடாமல் இருப்பதை உறுதி செய்யும்” என்றும் அவர் தெரிவித்தார்.

Team India: My11Circle நிறுவனமும் வெளியேறும்

புதிய சட்டத்தின்படி, பணம் வைத்து விளையாடும் இதுபோன்ற செயலிகளுக்கு விளம்பரம் செய்யும் அமைப்புகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் பிசிசிஐ இந்த முடிவை எடுத்திருக்கிறது. இந்திய அணி டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப் மட்டுமின்றி ஐபிஎல் ஸ்பான்ர்ஷிப்பிலும் சிக்கல் எழுந்துள்ளது. ஐபிஎல் தொடரின் அசோஷியேட் பார்ட்னரான My11Circle நிறுவனமும் பெட்டிங் செயலியை அடிப்படையாக கொண்டது, இந்நிறுவனம் ஐபிஎல் நிர்வாகத்துடன் வரும் 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 2028ஆம் ஆண்டு வரை ரூ.625 கோடிக்கு ஒப்பந்தம் செய்திருக்கிறது. தற்போது இந்த ஒப்பந்தமும் முடிவுக்கு வரலாம் என கூறப்படுகிறது.

Team India: அபராதம் கிடையாது 

மேலும் இந்த நிறுவனங்கள் முன்கூட்டியே ஸ்பான்ஸர்ஷிப்பில் இருந்து வெளியேறுவதால் கிரிக்கெட் வாரியத்திற்கு எவ்வித அபராதத்தையும் கொடுக்க தேவையில்லை என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட எந்தவொரு சட்டத்தாலும் ஸ்பான்சரின் முக்கிய வணிகம் பாதிக்கப்பட்டால், அவர்கள் கிரிக்கெட் வாரியத்திற்கு எவ்வித அபாரதத்தொகையும் செலுத்த வேண்டிய அவசியமில்லை என்ற விதியை ஒப்பந்தத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.