இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் நவீன தடுப்புச் சுவர் என்று அழைக்கப்படும் சட்டேஸ்வர் புஜாரா இந்த வாரம் தனது ஓய்வை அறிவித்தார். 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய கிரிக்கெட் அணியில், குறிப்பாக டெஸ்ட் அணியில் விளையாடி வந்தார் புஜாரா. தனது அசைக்க முடியாத பொறுமையாலும், நுட்பமான பேட்டிங் மூலம் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர் புஜாரா. இந்திய அணியில் இடம் பெற்று ஓய்வு பெரும் அனைத்து வீரர்களுக்கும் பிசிசிஐ மாதாந்திர ஓய்வூதியம் வழங்குகிறது. அந்த வகையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து புஜாராவிற்கு மாதந்தோறும் எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும் என்று பார்ப்போம்.
புஜாராவின் ஓய்வூதியம் எவ்வளவு?
பிசிசிஐ-யின் ஓய்வூதிய திட்டத்தின்படி, முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு அவர்கள் விளையாடிய போட்டிகளின் எண்ணிக்கையை பொறுத்து ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சட்டேஸ்வர் புஜாரா, ஓய்வூதிய திட்டத்தின் மிக உயர்ந்த பிரிவில் இடம் பிடித்துள்ளார். இதனால் அவருக்கு மாதந்தோறும் ரூ.70,000 ஓய்வூதியமாக கிடைக்கும்.
பிசிசிஐ ஓய்வூதியத் திட்டம்
கடந்த 2022 ஆம் ஆண்டு பிசிசிஐ தலைவராக இருந்த சௌரவ் கங்குலி, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நடுவர்களுக்கான ஓய்வூதியத்தை கணிசமாக உயர்த்தினார். இது குறித்து அப்போது அவர் கூறுகையில், “நமது முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் நிதி நலனை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம். வீரர்கள் தான் கிரிக்கெட்டின் உயிர்நாடி. அவர்களின் ஆட்ட காலம் முடிந்த பிறகு, அவர்களுக்கு ஆதரவாக நிற்பது ஒரு வாரியமாக எங்களது கடமையாகும். அதே போல், நடுவர்கள் என்பவர்கள் வெளியில் அதிகம் பேசப்படாத நாயகர்கள். அவர்களது பங்களிப்பையும் பிசிசிஐ மதிக்கிறது,” என்று தெரிவித்திருந்தார்.
புஜாராவின் கிரிக்கெட் பயணம்
2010 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரின் மூலம் தனது கிரிக்கெட் பயணத்தைத தொடங்கினார் புஜாரா. 2012ம் ஆண்டு ராகுல் டிராவிட் ஓய்வு பெற்ற பிறகு, இந்திய அணியில் No.3 பேட்ஸ்மேனாக தனது இடத்தை பிடித்து கொண்டார். கிட்டத்தட்ட 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 43.60 என்ற சராசரியுடன் 7195 ரன்களை குவித்துள்ளார் புஜாரா. இதில் 19 சதங்களும், 35 அரைசதங்களும் அடங்கும். இது தவிர, இந்தியாவிற்காக 5 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். மேலும், 2021ல் ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் அவர் இடம் பெற்றிருந்தார், ஆனால் அந்த சீசனில் எந்த போட்டியிலும் விளையாடவில்லை.
புஜாரா இந்திய கிரிக்கெட்டிலிருந்து மட்டுமே ஓய்வு பெற்றுள்ளார். எனவே, அவர் விரைவில் லெஜண்ட்ஸ் லீக் போன்ற தொடர்களில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கிரிக்கெட் வர்ணனையாளராகவும் பணியாற்றியுள்ளார். கடந்த இந்தியா இங்கிலாந்து தொடர், இந்தியா ஆஸ்திரேலியா தொடர்களில் வர்ணனையாளராக இருந்தார். எனவே, எதிர்காலத்தில் அவர் ஒரு முழுநேர கிரிக்கெட் நிபுணராகவும், வர்ணனையாளராகவும் தனது பயணத்தை தொடர வாய்ப்புள்ளது.
About the Author
RK Spark