பெங்களூரு,
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகா டி.மல்லிகெரே கிராமத்தை சேர்ந்தவர் புட்டசாமி. இவர் 2 பெண்டாட்டிக்காரர் ஆவார். இவரது முதல் மனைவி சுகன்யா. அவருக்கு ராகேஷ் என்ற மகனும், ரோஜா என்ற மகளும் உண்டு. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத் தகராறில் சுகன்யா தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து புட்டசாமி, பாக்யா என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். பாக்யாவுக்கும் பிள்ளைகள் உள்ளனர். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு புட்டசாமி இறந்துவிட்டார். இதையடுத்து 6 ஏக்கர் நிலத்தை பங்கிட்டு கொள்வது தொடர்பாக புட்டசாமியின் முதல் மனைவி, 2-வது மனைவி குடும்பத்தினருக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதையடுத்து கிராமத்தை சேர்ந்த ஊர்த்தலைவர்கள், முதல் மனைவியின் பிள்ளைகளான ராகேஷ், ரோஜாவுக்கு 4½ ஏக்கர் நிலத்தையும், பாக்யாவுக்கு 2 ஏக்கர் நிலத்தையும் பங்கிட்டு கொள்ளும்படி கூறினர். ஆனால் இதற்கு ராகேஷ், ரோஜா ஆகியோர் சம்மதிக்கவில்லை. இதை எதிர்த்து அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். ஆனால் போலீசார் விசாரணை நடத்தி, பாக்யாவுக்கு 3 ஏக்கர் நிலத்தை வழங்கினர். இதனால் ரோஜா, ராகேஷ் ஆகியோர் ஆத்திரத்தில் இருந்து வந்தனர்.
இதற்கிடையே பாக்யா தனக்கு ஒதுக்கிய 3 ஏக்கர் நிலத்தை உறவினருக்கு குத்தகைக்கு விட்டு இருந்தார். அதில் அந்த உறவினர், ஒரு பகுதியில் கரும்பு சாகுபடி செய்திருந்தார். மீதி பகுதியில் நெல் நடவு செய்ய அவர் உழவு செய்து போட்டிருந்தார். இதுபற்றி அறிந்த ரோஜா, அவரது கணவர் சூரி, மாமியார், பாட்டி ஆகியோர் பாக்யாவின் நிலத்திற்கு வந்து, அங்கு பயிரிட்டிருந்த கரும்புகளை பிடுங்கி எறிந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த பாக்யா தட்டிக்கேட்டுள்ளார்.
இதனால் இரு குடும்பத்தினர் இடையேயும் வாய்த்தகராறு முற்றி கைகலப்பு ஏற்பட்டது. ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் சித்தியான பாக்யா, தனது கணவரின் முதல் மனைவியின் மகளான ரோஜாவை நெல் நடவு செய்ய தயார் செய்து போட்டுள்ள சேற்று வயலில் தள்ளி தாக்கினார். பின்னர் ரோஜா மீது அமர்ந்துக் கொண்டு பாக்யா கைகளால் சரமாரியாக தாக்கினார்.
பின்னர் கிராம மக்களும், போலீசாரும் விரைந்து சென்று இரு குடும்பத்தினரையும் சமாதானப்படுத்தினர். இதுகுறித்து பாக்யா கொடுத்த புகாரின் பேரில் ரோஜா உள்பட 4 பேர் மீதும், ரோஜா கொடுத்த புகாரின் பேரில் பாக்யா உள்ளிட்ட சிலர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே சித்தியான பாக்யா, இளம்பெண் ரோஜா மீது அமர்ந்து தாக்கியதை யாரோ செல்போனில் படம் பிடித்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.