செயின்ட் லூயிஸ்,
கிராண்ட் செஸ் சுற்றுப்பயணத்தின் ஒரு அங்கமான சின்கியுபீல்ட் கோப்பை செஸ் போட்டி அமெரிக்காவில் உள்ள செயின்ட் லூயிஸ் நகரில் நடந்து வருகிறது.
இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த 6-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா, போலந்தின் டுடா ஜன் கிர்சிஸ்டோப்பை சந்தித்தார். வெள்ளை நிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா 32-வது நகர்த்தலில் டிரா கண்டார். முதல் சுற்றில் வெற்றி பெற்ற பிரக்ஞானந்தா அதன் பிறகு தொடர்ச்சியாக சந்தித்த 5-வது டிரா இதுவாகும்.
இதேபோல் உலக சாம்பியனான தமிழகத்தை சேர்ந்த குகேஷ், பிரான்சின் அலிரெஜா பிரோவ்ஜாவுடன் மோதிய ஆட்டம் 78-வது நகர்த்தலில் டிராவில் முடிந்தது. சாம் செவியன்-பாபியானோ கருனா (இருவரும் அமெரிக்கா), லெவோன் அரோனியன்-வெஸ்லி சோ (இருவரும் அமெரிக்கா), நோடிர்பெக் அப்துசத்தோரோவ் (உஸ்பெகிஸ்தான்)-மேக்சிம் வச்சியர் லக்ரேவ் (பிரான்ஸ்) இடையிலான ஆட்டங்களும் டிரா ஆனது.
9 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் 6-வது சுற்று முடிவில் பாபியானோ கருனா 4 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறார். லெவோன் அரோனியன், பிரக்ஞானந்தா ஆகியோர் தலா 3½ புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளனர்.