கடந்த 12 ஆண்டுகளாக இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரராக திகழ்ந்தவர் ரோகித் சர்மா. சேவாக்கிற்கு பிறகு தொடக்க வீரராக அதிரடியை காட்டி எதிரணியை பயமுறுத்தியவர் என கூறலாம். அவர் கடந்த 2007ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமானார். இதுவரை 273 ஒருநாள் போட்டிகள், 159 டி20 போட்டிகள், 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மொத்தம் 19000 ரன்களுக்கு மேலாக குவித்துள்ளார்.
இந்த சூழலில், ரோகித் சர்மா கடந்த ஆண்டு நடந்து டி20 உலகக் கோப்பையை வென்றதை அடுத்து டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இதையடுத்து கடந்த மே மாதம், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்தார். இது ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரோகித் சர்மா இன்னும் ஒருநாள் போட்டிகளில் மட்டும் தொடர்ந்து விளையாட முடிவு செய்திருக்கிறார். குறிப்பாக வரும் 2027 ஒருநாள் உலகக் கோப்பை வரை விளையாட முடிவு செய்துள்ளார்.
இந்த நிலையில், ரோகித் சர்மா தனது 18 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் டெஸ்ட் போட்டிகள்தான் விளையாடுவதற்கு மிகவும் கடினமான ஒன்று என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரையில், நீங்கள் 5 நாட்கள் விளையாட வேண்டும். அப்படி 5 நாட்கள் தொடர்ச்சியாக விளையாடுவது மிகப்பெரிய சவால். நாம் அதற்கு மனதளவில் நிறைய போராட வேண்டும்.
அதுமட்டுமல்லாமல், உடலளவிலும் இந்த டெஸ்ட் போட்டிகள் சோர்வை ஏற்படுத்தும். இளம் வயதில் முதல் தர போட்டிகளில் இரண்டு அல்லது மூன்று போட்டிகள் கொண்ட ஆட்டத்தில் பங்கேற்று விளையாடுவதன் மூலம் டெஸ்ட் போட்டிகளுக்கு நம்மை தயார்படுத்திக் கொள்ளலாம். தற்போது இருக்கும் இளைஞர்கள் டெஸ்ட் போட்டிகளுக்கு எவ்வாறு தயாராக வேண்டும் என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்ப தயாராக வேண்டும். முதல் தர போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவதால், டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் தன்மையை கற்றுக்கொள்ளலாம் என ரோகித் சர்மா கூறினார்.
ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த சில நாட்களிலேயே விராட் கோலியும் ஓய்வை அறிவித்தார். இனி இவர்கள் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார்கள். ஐபிஎல் போட்டிகளுக்கு பின்னர் சர்வதேச போட்டிகளில் இவர்களை தற்போது வரை காண முடியாத நிலையில், வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர்கள் விளையாடுவதை பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
About the Author
R Balaji