பிஹாரில் ஜன் சுராஜ் முயற்சியால் புலம்பெயர் மக்கள் குறித்து அரசியல் கட்சிகள் பேசுகின்றன: பிரசாந்த் கிஷோர்

பாட்னா: பிஹார் மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் புலம்பெயர் மக்கள் குறித்து இப்போது பேசுவதற்கு காரணம் ஜன் சுராஜ் கட்சி முன்னெடுத்த முயற்சிதான் என அக்கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

“பிஹாரில் எங்கள் கட்சியை பார்த்து பிற கட்சிகள் அஞ்சுகின்றன. முதல் முறையாக புலம்பெயரும் பிஹார் மக்களை எப்படி தடுத்து நிறுத்துவது என்ற பேச்சு எழுந்துள்ளது. இதற்கு ஜன் சுராஜ் கட்சி முன்னெடுத்த முயற்சிதான் காரணம்.

பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் புலம்பெயர் மக்கள் குறித்து பேசுகின்றனர். தேர்தலில் இன்னும் ஜன் சுராஜ் வெற்றி பெறவில்லை. ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக ரூ.400 என இருந்த பென்ஷன் தொகை இப்போது ரூ.1,100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு காரணம் மக்கள் எங்கள் பக்கம் நிற்பதுதான். இதன் மூலம் ஜனநாயகம் உயிர் கொள்ளும்.

இது தொடக்கம்தான். ஜன் சுராஜ் ஆட்சி அமைந்தால் மாற்றம் வரும். எந்தவொரு இளைஞரும் ரூ.10,000 – ரூ.12,000 ஊதியத்துக்காக பிஹாரை விட்டு வெளியேற வேண்டி இருக்காது” என பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

பிஹாரில் நடைபெறும் ராகுல் காந்தியின் ‘வாக்காளர் அதிகார யாத்திரை’யில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பங்கேற்பது குறித்த கேள்விக்கு: “அவர் பிஹார் மக்களை இழிவாக பேசியவர். கூலி தொழிலாளியாக பணியாற்றுவது பிஹார் மக்களின் டிஎன்ஏ-வில் இருப்பதாக கூறியவர். அவர் பிஹாரில் ராகுல் யாத்திரையில் பங்கேற்றால் மக்கள் அவரை காம்புகளுடன் விரட்டுவது உறுதி. அப்படிப்பட்ட நபரை தான் ராகுல் அழைத்து வருகிறார்” என பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.

பிரசாந்த் கிஷோர்: தேர்தல் வியூகவாதியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய பிரசாந்த் கிஷோர்தான் ஜன் சுராஜ் கட்சியின் தலைவர். இவர் 2 ஆண்டுகளாக மாநிலம் தழுவிய நடைபயணம் சென்று வருகிறார். 2024 நவம்பரில் பிஹாரில் நடந்த நான்கு சட்டமன்ற இடைத்தேர்தல்களில் போட்டியிட்ட ஜன் சுராஜ் கட்சி அனைத்து இடங்களிலும் தோற்றது. அக்கட்சியில் இரண்டு வேட்பாளர்கள் டெபாசிட் இழந்த போதிலும், இரண்டு இடங்களில் ஜன் சுராஜ் கட்சி, ஆர்ஜேடியின் வெற்றியை பின்னுக்கு தள்ளியது.

மாநிலம் முழுவதும் தனக்கு செல்வாக்கு உள்ளதாக சொல்லி வருகிறார் பிரசாந்த் கிஷோர், இவர் எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெறாவிட்டாலும் சில கட்சிகளின் வாக்குகளை உடைப்பார் என சொல்லப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.