ஷிம்கென்ட்,
16-வது ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தானில் உள்ள ஷிம்கென்ட் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (3 நிலை) போட்டியில் 41 வீராங்கனைகள் பங்கேற்றனர். தகுதி சுற்று முடிவில், உலக சாதனையாளரான இந்தியாவின் சிப்ட் கவுர் சம்ரா, ஸ்ரீயங்கா (தலா 589 புள்ளி) ஆகியோர் முதலிடம் பிடித்தனர். ஸ்ரீயங்கா ரேங்கிங் புள்ளிக்கான பந்தயத்தில் மட்டும் கலந்து கொண்டதால் பதக்க சுற்றில் களம் காண முடியாது. சிப்ட் கவுர் சம்ரா உள்பட 8 பேர் இறுதிசுற்றை எட்டினர்.
இறுதி சுற்றில் அபாரமாக செயல்பட்ட சிப்ட் கவுர் சம்ரா 459.2 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். அவர் ஆசிய சாம்பியன்ஷிப்பில் வென்ற 4-வது தங்கப்பதக்கம் இதுவாகும். சீன வீராங்கனை யுஜி யாங் (458.8 புள்ளி) வெள்ளிப்பதக்கமும், ஜப்பான் வீராங்கனை மிசாகி நோபதா (448.2 புள்ளி) வெண்கலப்பதக்கமும் வென்றனர்.
இதன் அணிகள் பிரிவில் சிப்ட் கவுர் சம்ரா (589), ஆஷி சவுக்ஷி (586), அஞ்சும் மோட்ஜில் (578) ஆகியோர் அடங்கிய இந்திய பெண்கள் அணி 1,753 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. இதன் மூலம் பஞ்சாப்பை சேர்ந்த 23 வயதான சிப்ட் கவுர் சம்ரா ஒரே நாளில் இரட்டை தங்கப்பதக்கத்தை வென்றார் . ஜப்பான் (1750) வெள்ளிப்பதக்கமும், தென்கொரியா (1,747) வெண்கலப்பதக்கமும் பெற்றன.