வாஷிங்டன்,
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகையில் தென்கொரிய ஜனாதிபதி லீ ஜே-மியுங்குடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், சீன மாணவர்களுக்கு அமெரிக்கா அனுமதி அளிக்க போவதில்லை என்பது போன்ற பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
ஆனால், சீன மாணவர்களை எங்களுடைய நாட்டுக்குள் வர நாங்கள் அனுமதிக்க போகிறோம். இது மிக முக்கியம். அமெரிக்க கல்லூரிகளில் அவர்கள் படிப்பார்கள். 6 லட்சம் மாணவர்களை நாங்கள் அனுமதிக்க போகிறோம் என்பது முக்கிய விசயம். ஆனால், சீனாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் என்றார்.
அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான உறவுகளை பராமரிக்க இந்த முடிவு முக்கியம் என கூறினார். சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும். ஆனால், நாட்டை அழிக்க கூடிய நடவடிக்கைகளை நான் எடுக்க மாட்டேன் என தெளிவுப்படுத்தினார். சீனாவுடன் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன என்றும் கூறினார்.
சீனா, அமெரிக்கா இடையே மறைமுக வர்த்தக போர் நடந்து வந்தது. இரு நாடுகளும் பரஸ்பரம் கூடுதல் வரிகளை விதித்தன. இதனால், இறக்குமதி செய்யப்படும் பொருட்களை கூடுதல் விலை கொடுத்து வாங்கள் வேண்டிய கட்டாயத்தில் அந்நாடுகளின் மக்கள் தள்ளப்பட்டனர்.
இதன்பின்னர், சீனா, அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இந்த சூழலில், டிரம்ப் அரசு சீனாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. எனினும், மறுபுறம் சீன நாட்டை சேர்ந்த மாணவர்கள் அமெரிக்காவில் படிக்க டிரம்ப் அரசு அனுமதியும் அளித்துள்ளது.