50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை

புதுடெல்லி,

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்கு எதிரான நடவடிக்கையாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு இந்தியா மீது வரிகளை விதித்து வருகிறது.

இதன்படி, ஏற்கனவே விதிக்கப்பட்ட 25 சதவீத வரியுடன் கூடுதலாக அபராதம் என கூறி 25 சதவீத வரி என மொத்தம் 50 சதவீத வரியானது இந்திய பொருட்கள் மீது விதிக்கப்படும் என டிரம்ப் அரசு தெரிவித்தது. இந்திய இறக்குமதி பொருட்கள் மீது விதிக்கப்படும் 25 சதவீத கூடுதல் வரி தொடர்பான நோட்டீஸ் ஒன்றையும் அமெரிக்கா நேற்று பிறப்பித்தது.

இந்த நடைமுறை இன்று (27-ந்தேதி) அதிகாலை 12.01 மணி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால், ஆடைகள், ரத்தினங்கள், நகைகள், கடல்சார் உணவு பொருட்கள் மற்றும் தோல் பொருட்கள் சார்ந்த துறைகள் கடுமையாக பாதிப்பை எதிர்கொள்ளும்.

எனினும், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மருந்து பொருட்களை உற்பத்தி செய்யும் இந்திய மருந்து ஆலைகள், மின்னணு பொருட்கள் மற்றும் மொபைல் போன்கள் (ஆப்பிள் ஐபோன் உள்பட) ஆகியவை இந்த வரிவிதிப்புகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

ஆனால், 10 முதல் 25 சதவீத வரிகளை கொண்டுள்ள அண்டை நாடுகளின் ஏற்றுமதியுடன் ஒப்பிடும்போது, இந்திய ஏற்றுமதியாளர்கள் போட்டியை எதிர்கொள்ள வேண்டிய பாதிப்புகள் உள்ளன. இந்தியாவில் உள்ள நூற்றுக்கணக்கான சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடுமையான பாதிப்புகளை சந்திக்கும். இதனால், வேலைவாய்ப்பின்மை மற்றும் பணி நீக்கம் போன்றவையும் அந்நிறுவன தொழிலாளர்களை பாதிக்கும்.

இதேபோன்று 2026 நிதியாண்டில் 0.2 சதவீதம் முதல் 1 சதவீதம் வரை மொத்த உள்நாட்டு உற்பத்தியும் குறையும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்க வரி விதிப்பால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று மதியம் கூடியது. இந்த கூட்டத்தில் கூடுதல் வரி விதிப்புகளை எதிர்கொள்வது பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. இதில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.