Mohammed Shami : இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் களத்திற்குத் திரும்பியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான தொடர் மற்றும் ஆசியக் கோப்பைக்கான அணியில் இருந்து அவர் விலக்கப்பட்ட நிலையில், தனது உடல் தகுதியை நிரூபிக்க பெங்களூருவில் நடைபெற்ற துலீப் டிராபி காலிறுதிப் போட்டியில் களமிறங்கினார். தனது முதல் தரப் போட்டியை 2024 நவம்பருக்குப் பிறகு விளையாடிய ஷமி, அவர் எதிர்பார்த்ததைவிட சிறப்பாகவே செயல்பட்டார்.
Add Zee News as a Preferred Source
உடல்நலக் குறைபாடு காரணமாக விலகல்:
கடந்த சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஐபிஎல் 2025 தொடரில் விளையாடிய ஷமி, பின்னர் நடந்த இந்தியா-இங்கிலாந்து ஆண்டர்சன்-தெண்டுல்கர் தொடரில் இருந்து விலக்கப்பட்டார். அவர் உடல் தகுதி குறித்து சந்தேகம் கொண்டதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின்போதும் இதேபோன்ற ஒரு நிலை ஏற்பட்டதாக ஷமி தெரிவித்தார்.
தேர்வு குழுவுக்கு ஷமியின் வேண்டுகோள்:
பெங்களூரில் உள்ள முகமது ஷமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஆசியக் கோப்பைக்கான அணித் தேர்வுக்கு முன்னர் தேர்வாளர்கள் தன்னிடம் பேசினார்களா என்று கேட்கப்பட்டபோது, “நான் யாரையும் குறை சொல்லவில்லை, தேர்வாளர்கள் என்னிடம் பேச வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அதுபற்றி எனக்கு அவ்வளவாகக் கவலை இல்லை. தேர்வுக்குழுவின் திட்டங்களில் நான் இருந்தால், என்னை அணியில் தேர்வு செய்யட்டும். இல்லையென்றால், என்னைத் தேர்வு செய்யாதீர்கள். எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. உங்கள் கடமைகளை நிறைவேற்றி, நாட்டிற்கு எது சிறந்தது என்று செய்யுங்கள். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால், என்னால் முடிந்ததைச் சிறப்பாகச் செய்ய முயற்சிப்பேன் என்று நம்புகிறேன்” என்று ஷமி பதிலளித்தார்.
துலீப் டிராபியில் ஷமியின் செயல்பாடு:
துலீப் டிராபி காலிறுதியில் கிழக்கு மண்டலத்திற்காக விளையாடிய ஷமி, தனது முதல் நாள் ஆட்டத்தில் 17 ஓவர்கள் வீசி 55 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். தொடக்கத்தில் சற்று தொய்வாகக் காணப்பட்ட அவர், தனது முதல் இரண்டு ஸ்பெல்களிலும் மெதுவாகவே பந்துவீசினார். முதல் ஸ்பெலில் 5-2-10-0 என்ற கணக்கிலும், இரண்டாவது ஸ்பெலில் 3-0-10-0 என்ற கணக்கிலும் அவரது பந்து வீச்சு இருந்தது. ஆனால், மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு, ஷமியின் பந்து வீச்சில் ஒரு தெளிவான மாற்றம் தெரிந்தது. அவரது பந்து வீச்சு வேகம் மற்றும் துல்லியம் கூடி, பேட்ஸ்மேன்களை திணறடித்தது. இந்த ஸ்பெலில் 4-2-9-0 என்று பந்துவீசிய ஷமி, சஹில் லோத்ரா என்ற பேட்ஸ்மேனின் விக்கெட்டை கைப்பற்றினார்.
About the Author
S.Karthikeyan