வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
பள்ளிப் பாடப் புத்தகங்களில் முல்லைக்குத் தேர் ஈந்தவன் என்று என்னுள் அறிமுகமானவன் வேள்பாரி. அது குறித்து என் தோழியிடம் விவாதிக்கும் போது அவள் கூறினாள் “பாரி என்ன அறிவு கெட்டவனா? முல்லைப் படற ஒரு கொம்பை நட்டு வைத்திருந்தால் போதுமே! தேரையே யாராவது தருவார்களா?” அப்போது எனக்குள் தோன்றியது “ஆம். இவள் கூறியது உண்மை தானே! இது பாரிக்கு தெரிந்திருக்காதா? ஆயினும், அவன் ஏன் தேரைத் தந்தான்? அப்படி முல்லைக்குத் தான் வந்த தேரைக் கொடுக்கும் அளவுக்கு கருணையை எங்கிருந்து அவன் பெற்றான்?” என்ற கேள்விகளை நான் வினவிய போது அதற்கு பதில் கிடைக்கவில்லை.
பள்ளிக்காலம் என்பதால் அதனை குறித்து புரிதலும் இன்றி தவித்தேன். விடை அறியவே இளங்கலையில் தமிழ் இலக்கியத்தைத் தெரிவு செய்து கல்லூரி வாழ்க்கைக்குள் நுழைந்தேன். தேடி தேடி பயின்ற போதே சங்க இலக்கியங்கள் என்னுள் மலர்வனமாக மலர, மகிழ்வோடு நாளும் உலாவினேன். என் கேள்விக்கும் பதில் கிட்டியது.

முல்லை நிலத் தலைவன் வினை முடித்து திரும்புங்கால் கார்காலம் துவங்கி இருக்கும். அவன் வரும் வழியில் முல்லை பூக்கள் மலர்ந்து காடே மணமணக்கும். தலைவனின் தேர் மணிகள் ஒலிக்கும் ஓசையைக் கேட்டு இணைந்திருக்கும் வண்டுகள் அஞ்சி பிரிந்து விடக்கூடாது எனத் தேர்மணிகளை நீக்கியே தலைவன் பயணம் செய்ததாகச் சங்க இலக்கியங்களைத் துழாவும் போது தரவு கிட்டியது. இதனைக் கண்டு அதிர்ந்து தான் போனேன். இம்மரபில் வாழ்ந்த பாரி முல்லைக்கு தேர் ஈவதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை என்று புரிந்து கொண்டேன். ஆயினும், சங்கச் சமூகம் இதனைக் கண்டு வியந்து இலக்கியங்களில் பொறிக்கக் காரணம் இல்லாது இருக்குமா? தொடர்ந்து இலக்கிய உலகில் பயணிக்கவே எனக்கு பதில் கிட்டியது. இனக்குழுச் சமூகம் அழிந்து அரசுடைச் சமூகம் ஓங்கிய சூழல்.
அன்பு மற்றும் அறவழிப்பட்ட இனக்குழுச் சமூகம் பொருளுடமை மற்றும் அதிகாரத்தின் வயப்பட்ட அரசுடைச் சமூகமாக உருவெடுக்கவே, தன் ஆற்றாமையின் வெளிப்பாடாகக் காலம் பாரியை வரலாற்று ஏடுகளில் நினைவில் கொள்கிறது. வென்றவர்களின் நினைவுகளையே அசைபோடும் வரலாற்று ஏடுகள் சதியால் வீழ்த்தப்பட்டு தோல்வியை எய்தியிருந்தாலும் பாரியை அறம் மற்றும் கருணையின் வடிவாக, வீரத்தின் விளைநிலமாக, இயற்கை ஆர்வலனாகக் கொண்டாடித் துதி பாடியது. இப்படிப்பட்ட பாரியின் வரலாற்றைக் கதைக்களமாகக் கொண்டு பாரிக்கு நியாயம் செய்து இருக்கிறார் எழுத்தாளர் சு.வெங்கடேசன் அவர்கள்.
இயற்கையினின்று விலகிய சமூகத்தில் வாழும் நம் அனைவருக்குமே கபிலரின் கரம் பற்றி பறம்பு மலையை நோக்கி பயணிக்குங்கால் ஆச்சரியமே அடிக்கு அடி தோன்றும். வார்த்தைகள் தெரிவிலும் படைப்பாளர் நம்மை திடுக்கிடவே வைக்கிறார். சான்றாக. கபிலர் பாரியிடம் வினவுவார் “கொற்றவைக்கூத்து பாலை நிலத்தில் நடைபெற வேண்டியது. அது குறிஞ்சி நிலத்தில் நிகழ்வதற்கான காரணம் என்ன?” என்று. அதற்கு பாரியின் மறுமொழி “மனம் கொடும்பாலையாக இருக்கும் போது கொற்றவை கூத்து எங்கு நடைபெற்றால் என்ன?” கத்தி முனையை விட பேனா முனை வலிமையானது தான்.

நாவலின் ஆகச்சிறந்த கதாபாத்திரம் பொற்சுவை. அவள் காதலின் தோல்வியுறவே வணிக நோக்கத்தோடு நடந்த திருமணத்தில் பாண்டிய இளவரசனை மணக்கிறாள். போரின் நடுவே பாரியைக் காண விரையும் பொற்சுவையின் பயணத்தை சாதகமாக்கி சதி நிகழ்த்தும் குலசேகர பாண்டியனின் எண்ணத்திற்கு பேரிடி விழுவது போல் நிகழ்ந்த பொற்சுவையின் மரணத்தால் பாரியின் உயிர் காக்கப்பட்டு அறத்தின் வெற்றி அடைகிறது. நம் அனைவரோடும் பொருந்தக்கூடிய சமூகத்தின் சட்ட திட்டங்களுக்கு ஆட்பட்ட பேதையின் உள்ளத்தை, அவலத் துடிப்பை எடுத்துரைக்கும் கதாபாத்திரம். அவள் சுதமதியோடு உரையாடும் ஒவ்வொரு சொல்லும் பெண்மைக்குரிய விழிப்போடு, அதிகார வயப்பட்ட.
பொருளுடமையின் உச்சபட்ச சமூகத்தின் கைப்பாவைகளாகிய பெண்களின் நிலையும் வெளிப்படும். நள்ளிரவில் அவள் உடல் சூறையாடப்படும் பொழுதும் மறுநாள் கண்ணாடியை நோக்கி புன்னகைக்கிறாள்.
“என் சிரிப்பை யாராலும் என்னிடம் இருந்து பறிக்க முடியாது சுதமதி” என்றும் உரைக்கிறாள். அந்த இடம் ஒவ்வொரு பெண்ணும் கண்ணீர் விடத் தகுந்த தருணத்தை அளிக்கிறது. தொடர்ந்து படிக்கும் வாசகரை நிறுத்தி உணர்வலைகள் கடல் போல் பொங்க, அதனைக் கையமர்த்த வழியின்றி திணறும் தருணத்தைக், கடந்து வர இயலா துயரத்தை அள்ளித் தெளிக்கும் சம்பவங்கள் கதை நெடுகிலும் உண்டு.
எதிர்பாராத திருப்பங்களில் ஒன்று பொற்சுவையின் மரணம். அன்னகர்கள் வழியே ஆபத்து நெருங்க அறம் காக்க அவள் புரிந்த சமயோஜித செயல் கபிலரின் தலைசால் மாணவி என்பதை பறைசாற்றும் இடம் ஆகும். கல்வியைப் பழுதறக் கற்றால் இக்கட்டான சூழலையும் மதி கொண்டு வெல்லும் ஆற்றல் கிட்டும் என்று பொற்சுவை நிரூபித்து காட்டி விட்டாள். பாரியைக் கண்டு வணங்கும் அவா இருப்பினும் அறத்தைக் காக்க தன் ஆசையை அடக்கி ஆருயிரையும் நீத்தாள். அறம் காக்கும் தெய்வமாகப் பறம்பு மண்ணில் ஓங்கி விட்டாள்.
பெண்ணின் மன எண்ணங்களுக்கு மதிப்பளிக்காத அதிகார வர்க்கத்தின் கொடூர முகத்தை பொற்சுவையின் வாழ்வு நன்கு விளக்குகிறது. பெண்களைக் கொண்டாடிய, அவர்களின் மன எண்ணங்களுக்கு மதிப்பளிக்கும் இனக்குழு வாழ்வைக் காண ஆசையாக தான் இருக்கிறது.
பறம்பின் தலைவன் பாரியாக இருந்தாலும் குல நாகினிகளின் வாக்கே அங்கு வேதம் ஆகிறது. அசுனமாவோடு தொடர்புபடுத்தப்படும் அகுதையின் வாழ்வு சங்க இலக்கியங்களில் ஓரிரு இடங்களில் தென்பட்டதை வீரயுக நாயகன் வேள்பாரியில் காட்சிபடுத்திய விதம் அருமை. காட்டு மரங்களாகக் கட்டற்ற ஆதினி, மயிலா மற்றும் அங்கவையின் காதல் கொண்டாட்ங்களைக் காணும்போது பாரியின் நிழலின் பறம்பின் குடியாக வாழும் நப்பாசை எழாமல் இல்லை.
தோற்ற பாரியைக் காட்சிபடுத்தும் இலக்கியங்களுக்கு மத்தியில் வென்ற பாரியோடு கதை முடிவது அறம் நிலைநிற்கும் வரைப் பாரிக்கு அழிவில்லை என்பதை உணர்த்துகிறது.

இயற்கையின் வினோதங்கள் என்ற பதத்திற்கு பொருள் காண வேண்டுமா? வீரயுக நாயகன் வேள்பாரியை நாடலாம். மகர வாழை இலை, சோம பூண்டு பானம், ஏழிளம் பாலை, அன்னமகிழரிசி, கருநெல்லிக்கனி, இராவெரி மரம், சிறகு நாவல் பழம், அறுபதாங்கோழி, நிலமொரண்டை, சுண்டாப்பூனை எனச் சொல்லிக் கொண்டே போகலாம். அழிக்க நினைத்த பாண்டியனின் பாண்டரங்கத்திலும் பாரி சிலையாக சிறப்பிடம் பெற அவன் புதுமையையும் நாடும் குணமே காரணம். வனிகத்தை வெறுத்த பாரி தன் மக்கள் ஏட்டுச் செல்வ அறிவு பெற்று தன்னிறைவு பெற்றவர்களாக விளங்க வேண்டும் என எண்ணம் கொண்டதிலிருந்தே சிறந்த தலைவனுக்கான மாதிரி வடிவம் ஆகிறான்.
இல்லத்திற்கும் சிறந்த தலைவனாக அவன் விளங்குவதற்கான சான்றுகள் நாவலில் பல கொட்டிக் கிடக்கின்றன. தீக்களியில் உதிரனோடு இணைந்து அங்கவை ஆடிய பொழுது அவளின் காதலை அறிந்த பாரி தன் மகளின் காதலை மனமுவந்து ஏற்கிறான். தன் மனைவியின் மீது காதல் வயப்படக்கூடாது என்பதற்காக மனைவியை காட்டிலும் பேரழகு வாய்ந்தவளை மகனின் வசம் ஒப்புவிக்கிறான் குலசேகர பாண்டியன். இருவேறு பட்ட தந்தைகளின் இயல்போடு இல்லற வாழ்விலும் ஆணாதிக்கம் மிஞ்சிய இயல்பைப் போகிற போக்கில் சொல்லி அதிர வைக்கிறார் ஆசிரியர்.
பழங்கதைகள் மற்றும் தொன்மங்களின் வழியாக வெளிப்படும் முருகன் – வள்ளி கதையைக் கேட்குங்கால் முருகனின் அற்புதங்கள், வீரம் மற்றும் அருட்குணத்தை அறிய முடிகிறது. ஆனால் நம்மில் ஒருவராகப் பறம்பு மண்ணில் ஆதி மைந்தர்களாக முருகனும் வள்ளியும் காதல் விளையாட்டு புரிய உள்ளம் உவகை பூக்கத் தான் செய்கிறது. உவகையும், உரசலும், காதலும், வீரமும், அறமும், துரோகமும், இயற்கையை வனிகமாக்கலும், உயிர்த்த இயற்கையோடு உறவாடலுமாக வெற்றி நடை போடுகிறது வீரயுக நாயகன் வேள்பாரி.
-அ.கீதா
முனைவர் பட்ட ஆய்வாளர்
தமிழாய்வுத்துறை
பிஷப் ஹீபர் கல்லூரி
திருச்சி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!