ஸ்ரீநகர்,
வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் அங்கு பெரும்பாலான இடங்களில் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முக்கிய நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து வருகிறது. சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. சண்டிகர் – குல்லு நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 50 கிலோமீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காய்கறிகளை ஏற்றி வந்த சரக்கு லாரிகளும் இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ளன.ஆப்பிள், தக்காளி போன்ற அழுகும் பொருட்களை ஏற்றி வந்த லாரிகளும் இந்த நெரிசலில் சிக்கியுள்ளதால், கடும் நஷ்டம் ஏற்படும் என்று வியாபாரிகளும் விவசாயிகளும் கவலை தெரிவித்தனர்.
சிறிய வாகனங்களுக்கு நெடுஞ்சாலை திறக்கப்பட்டிருந்தாலும், கனரக வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. நெடுஞ்சாலையில் 12-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், இதனை சீரமைக்கும் பணிகள் நடப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.