Chennai Super Kings: ஐபிஎல் 2025 தொடரில் கடைசி இடத்தில் முடிந்திருந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. கடைசியாக சிஎஸ்கே 2023ஆம் ஆண்டில் கோப்பையை வென்ற பின்னர் பெரிய மாற்றத்திற்கு தயாரானது.
Add Zee News as a Preferred Source
முதலில், கேப்டன்ஸி ருதுராஜ் கெய்க்வாட் வசம் ஒப்படைக்கப்பட்டது. 2024இல் சிஎஸ்கே பிளே ஆப் வரும் வாய்ப்பை நூலிழையில் ஆர்சிபியிடம் இழந்து 5வது இடத்தில் நிறைவு செய்தது. 2025 சீசனில் சிஎஸ்கேவுக்கு ஆரம்பம் வழக்கம்போல் சரியாக அமையவில்லை. காம்பினேஷனில் பெரிய சொதப்பல்கள் வந்தன, ருதுராஜ் கெய்க்வாட் மீது விமர்சனங்கள் அதிகரித்தன. அந்தச் சூழலில் அவரும் காயத்தால் தொடரில் இருந்தே விலக மீண்டும் தோனி கேப்டன்ஸியை கையிலெடுத்தார்.
Chennai Super Kings: செட்டாகிவிட்ட சிஎஸ்கே
தோனியாலும் கூட சிஎஸ்கேவை முழுமையாக மீட்டெடுக்க முடியவில்லை. இருந்தாலும் சிஎஸ்கே (CSK) எப்போதும் தொலைநோக்கு பார்வை கொண்ட அணி என்பதில் எந்த சந்தேகம் இல்லை. அப்படிதான் கடந்த சீசனிலேயே காயமடைந்த வீரர்களுக்கு மாற்றாக சில வீரர்களை அணிக்குள் கொண்டு வந்து தற்போது சிறப்பான காம்பினேஷனை கண்டுபிடித்துவிட்டது. ஆயுஷ் மாத்ரே, உர்வில் பட்டேல், டிவால்ட் பிரேவிஸ் ஆகியோர் சிஎஸ்கேவின் செல்லப்பிள்ளைகளாக பார்க்கப்படுகிறார்கள். இவர்களுடன் ருதுராஜ், தூபே ஆகியோரும் அனுபவமும் சேர்ந்தால் நிச்சயம் அடுத்தாண்டு சிஎஸ்கே பிளே ஆப் செல்வது உறுதி எனலாம்.
Chennai Super Kings: சிஎஸ்கேவுக்கு இருக்கும் 2 பிரச்னை
இருந்தாலும் சிஎஸ்கேவுக்கு பிரச்னை என்றால் ஓபனிங் மற்றும் வெளிநாட்டு ஆல்-ரவுண்டர் பிரிவிலும்தான். ரச்சின் ரவீந்திரா மற்றும் கான்வே இருவர் இருந்தாலும் கூட கடந்த இரண்டு சீசன்களிலும் இவர்களால் பெரியளவுக்கு சோபிக்க முடியவில்லை. இதனால் புதிய காம்பினேஷனை நோக்கி சிஎஸ்கே நகர வேண்டும். மீண்டும் ருதுராஜ் கெய்க்வாட்டே ஓபனிங்கில் இறங்கினால் பிரச்னை தீர்ந்துவிடும். ருதுராஜ் – ஆயுஷ் மாத்ரே இணை பவர்பிளேவில் எதிரணியை பந்தாடிவிடும். எனவே, ரச்சின் மற்றும் கான்வே இணையில் ஒருவரையோ அல்லது இருவரையோ ஏலத்தில் விடுவித்துவிடலாம்.
Chennai Super Kings: கேம்ரூன் கிரீனுக்கு கொக்கிப் போடணும்…!
வெளிநாட்டு ஆல்-ரவுண்டர்களை பொருத்தவரை சாம் கரன் மற்றும் ஜேமி ஓவர்டன் இருவர் இருக்கிறார்கள். இவர்களால் பேட்டிங்கில் ஓரளவு பங்களிக்க முடிந்தாலும் பந்துவீச்சில் சொதப்புகிறார்கள். ஜேமி ஓவர்டன் ஃபினிஷிங் ரோலில் விளையாட வேண்டும். சாம் கரன் பேட்டிங் ஆர்டரில் நம்பர் 3 அல்லது நம்பர் 4இல் விளையாட வேண்டிய நிலை உள்ளது. இதனால் இவர்களில் ஒருவரையோ அல்லது இருவரையோ கழட்டிவிட்டு மினி ஏலத்தில் வரும் கேம்ரூன் கிரீன் (Cameron Green) சிஎஸ்கே கொக்கிப்போட்டு தூக்கலாம். இந்திய ஓபனர்கள் அமைந்துவிட்டால் கேம்ரூன் கிரீனை பிளேயிங் லெவனில் விளையாடுவதில் பிரச்னை இருக்காது. அதுமட்டுமின்றி, ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, விஜய் சங்கர் ஆகியோரில் இருவரை நிச்சயம் வெளியேற்ற வேண்டும்.
Chennai Super Kings: சிஎஸ்கே இந்த வீரர்களை கழட்டிவிடணும்…!
ஏற்கெனவே அஸ்வின் ஓய்வை அறிவித்துவிட்டதால் சிஎஸ்கே பர்ஸில் ரூ.9.75 கோடி சேர்ந்துவிட்டது. சிஎஸ்கே பர்ஸில் (CSK Purse Amount) தற்போதைய இருப்பு ரூ.50 லட்சம் ஆகும். தொடர்ந்து, கான்வே (ரூ.6.25 கோடி), ராகுல் திரிபாதி (ரூ.3.40 கோடி), சாம் கரன் (ரூ.2.40 கோடி), தீபக் ஹூடா (ரூ.1.70 கோடி), ஜேமி ஓவர்டன் (ரூ.1.50 கோடி) ஆகியோரை சிஎஸ்கே மினி ஏலத்திற்கு விடுவிக்கும்பட்சத்தில் பர்ஸில் ரூ.25.5 கோடி கிடைக்கும். இடதுகை வேகப்பந்துவீச்சில் கலீல் அகமது, குர்ஜப்னீத் சிங், முகேஷ் சௌத்ரி என மூன்று பேர் இருப்பதால் இவர்களில் குர்ஜப்னீத் சிங்கை (ரூ.2.20 கோடி) சிஎஸ்கே விடுவிக்கலாம். அதேநேரத்தில் பர்ஸ் அடிப்படை தொகையும் ரூ.5 கோடி உயர இருப்பதாக கூறப்படும் நிலையில் ஏறத்தாழ ரூ.30 கோடி இருப்பு இருக்கும். சிஎஸ்கேவுக்கு இரண்டு, மூன்று பெரிய வீரர்களை எடுத்தால் போதும் என்பதால் நிச்சயம் கேம்ரூன் கிரீனை அவர்கள் எடுக்க வாய்ப்புள்ளது.
Chennai Super Kings: கேம்ரூன் கிரீன் கிடைக்காவிட்டால்…
ரச்சின் ரவீந்திரா மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் அணியில் தொடர அதிக வாய்ப்புள்ளது. கேம்ரூன் கிரீனுக்கு பேக்அப் வேண்டும் என்றால் சாம் கரன் அல்லது ஜேமி ஓவர்டனில் ஒருவரை வைத்துக்கொள்ளலாம். ஒருவேளை கேம்ரூன் கிரீனை யாராவது அதிக தொகைக்கு எடுத்துவிடும்பட்சத்தில் மிட்செல் ஓவன் நிச்சயம் கிடைப்பார். எனவே சிஎஸ்கே இருவரில் ஒருவரையாவது எடுக்க நினைக்க வேண்டும். மிட்செல் ஓவன் (Mitchell Owen) ஓபனிங்கில் கலக்குவார், நம்பர் 3 இடத்திலும் சிறப்பாக விளையாடுவார். கேம்ரூன் கிரீன் நம்பர் 4இல் மிகச்சிறப்பாக இருப்பார். நம்பர் 5இல் தூபே, நம்பர் 6இல் பிரேவிஸை வைக்கலாம். உர்வில் பட்டேல் காம்பினேஷனில் இல்லை எனில் இவர்களின் பேட்டிங் ஆர்டர் ஒருபடி மேலே போகும். சிஎஸ்கேவுக்கு இதைவிட தரமான பேட்டிங் ஆர்டர் கிடைக்க வாய்ப்பே இல்லை. பினிஷிங் ரோலில் ஒரு இந்திய வீரரை எடுத்துவிட்டால் சிஎஸ்கே செட்டாகிவிடும்.
Chennai Super Kings: கட்டுரையின் சுருக்கம்
– மினி ஏலத்தில் கேம்ரூன் கிரீன் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. இவர் சிஎஸ்கே அணிக்கு சிறந்த ஆப்ஷனாகவும் இருப்பார்.
– அஸ்வின் ஓய்வை அறிவித்திருப்பதால் சிஎஸ்கே, கேம்ரூன் கிரீனை தூக்க பொன்னான வாய்ப்பு உருவாகி உள்ளது.
– மினி ஏலத்தில் கான்வே, ராகுல் திரிபாதி, சாம் கரன், தீபக் ஹூடா, ஜேமி ஓவர்டன், குர்ஜப்னீத் சிங் உள்ளிட்டோரை நீக்கினால் பர்ஸ் தொகை அதிகமாகும்.