மும்பை: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 48-வது ஆண்டுப் பொதுக் கூட்டம் (ஏஜிஎம்) மும்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஜியோ Frames என்ற ஸ்மார்ட் கிளாஸை அறிமுகம் செய்தார் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்களில் ஒருவரான ஆகாஷ் அம்பானி.
இந்திய மொழிகளின் சப்போர்ட் உடன் ஏஐ திறன் கொண்ட இயங்குதளத்தில் ஜியோ Frames இயங்கும். இந்த ஸ்மார்ட் கிளாஸ் மூலம் ஹெச்.டி தரத்தில் படம் எடுக்கலாம், வீடியோ ரெக்கார்ட் செய்யலாம், சமூக வலைதளத்தில் நேரலை செய்யலாம். இதில் எடுக்கப்படும் படம் மற்றும் வீடியோ உள்ளிட்டவை தானியங்கு முறையில் ஜியோ ஏஐ கிளவுடில் சேமிக்கப்படும்.
இதில் உள்ள இன்-பில்ட் ஓபன் இயர்-ஸ்பீக்கர் மூலம் இசை கேட்கலாம், மீட்டிங்கில் பங்கேற்கலாம், தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளலாம். மேலும், இதில் உள்ள ஏஐ அம்சத்தின் மூலம் நொடி பொழுதில் தரவுகளை பெறலாம். முக்கியமாக இதில் படிப்படியான வழிகாட்டுதலும் பயனருக்கு கிடைக்கும் என ஆகாஷ் அம்பானி கூறியுள்ளார்.
இந்திய டெலிகாம் நிறுவனங்களில் முதன்மையானதாக திகழும் நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது ரிலையன்ஸ் ஜியோ. கடந்த 2016-ல் தான் இந்த நிறுவனம் பொது பயன்பாட்டுக்கு சேவையை வழங்கி வருகிறது. அடுத்த சில ஆண்டுகளில் டெலிகாம் சந்தையில் கிடுகிடுவென வளர்ச்சி கண்டது. ஜியோ டிவி, ஜியோ Wi-Fi, ஜியோ மொபைல் போன், ஜியோ கணினி உள்ளிட்டவற்றை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.