வாஷிங்டன்,
அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றுக் கொண்ட டொனால்டு டிரம்ப், பொருளாதாரம் மற்றும் நிர்வாக ரீதியாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையில், தற்போது 79 வயதாகும் டிரம்ப்பின் உடல்நிலை குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. இருப்பினும் தான் முழு உடல்நலத்துடன் இருப்பதாக டிரம்ப் கூறியுள்ளார்.
முன்னதாக டிரம்ப்பின் கைகளில் சிராய்ப்பு காயங்கள் இருப்பதை காட்டும் சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவின. இது குறித்து கடந்த ஜூலை மாதம் வெள்ளை மாளிகை சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், டிரம்ப்புக்கு நாள்பட்ட நரம்பியல் பாதிப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், அடிக்கடி கைகுலுக்குவதால் ஏற்படும் லேசான தோல் எரிச்சல் பாதிப்பு டிரம்ப்புக்கு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், அமெரிக்க அதிபராக விரைவில் பதவியேற்க உள்ளதாக தகவல்கள் பரவின. இந்நிலையில், 41 வயதான ஜே.டி.வான்ஸ், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “அதிபர் டிரம்ப் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார். அவர் தனது பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்வார். ஒருவேளை ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால், அதிபராத பதவியேற்பதற்கு நான் தயாராக உள்ளேன்” என்று தெரிவித்தார்.
இதனால் அதிபர் டிரம்ப்பின் உடல்நலம் குறித்து சமூக வலைதளங்களில் பலர் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில், உடல்நலம் குறித்த அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அதிபர் டிரம்ப் கோல்ப் விளையாட்டில் ஈடுபட்டுள்ளார். நேற்று விர்ஜீனியா மாகாணத்தில் உள்ள கோல்ப் விளையாட்டு மைதானத்திற்கு சென்ற அவர், அங்கு நீண்ட நேரம் கோல்ப் விளையாடினார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.