தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரும், முன்னாள் கேப்டனுமான விஜய் சங்கர், தமிழ்நாடு அணியில் இருந்து விலகி, வரவிருக்கும் உள்ளூர் சீசனில் திரிபுரா அணிக்காக விளையாட உள்ளார். அவரின் இந்த முடிவு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 12 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு அணிக்காக விளையாடி வந்த நிலையில், இந்த திடீர் விலகலுக்கான காரணங்கள் குறித்து நிலவி வந்த மர்மத்திற்கு, தற்போது விஜய் சங்கர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
Add Zee News as a Preferred Source
தொடர் புறக்கணிப்பு
தனது இந்த அதிரடி முடிவு குறித்து மனம் திறந்து பேசியுள்ள விஜய் சங்கர், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தேர்வு குழுவினர் தன்னிடம் நடந்து கொண்ட விதமே இந்த முடிவுக்கு முக்கிய காரணம் என்று கூறியுள்ளார். “தொடர்ந்து சிறப்பாக விளையாடிய போதிலும், தேர்வு குழுவினரிடமிருந்து எந்த விதமான தெளிவான விளக்கமும் கிடைக்கவில்லை. பலமுறை அணியில் இருந்து காரணம் இல்லாமல் நீக்கப்பட்டேன். இத்தனை ஆண்டுகள் விளையாடிய பிறகு, அணியில் இடம் கிடைக்காமல், வெளியே அமர்ந்து வீரர்களுக்கு தண்ணீர் கொடுப்பது மிகவும் கடினமாக இருந்தது,” என்று தனது விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற புச்சி பாபு கோப்பைக்கான தொடரில், முதல் போட்டிக்கு பிறகு, அடுத்த இரண்டு போட்டிகளில் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டது, அவரது இந்த முடிவுக்கு உடனடி காரணமாக அமைந்துள்ளது. “கடந்த ஆண்டு ரஞ்சி கோப்பையின் முதல் இரண்டு போட்டிகளில் நீக்கப்பட்டேன், பின்னர் மீண்டும் அணிக்கு திரும்பினேன். சையத் முஷ்டாக் அலி கோப்பையின் கடைசி இரண்டு போட்டிகளிலும் நான் சேர்க்கப்படவில்லை. இந்த தொடர் புறக்கணிப்புகளுக்கு பிறகு, ஒரு கட்டத்தில் ஒரு தெளிவு தேவைப்பட்டது, அது எனக்கு கிடைக்கவில்லை,” என்று சங்கர் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பற்ற உணர்வு
தமிழ்நாடு அணிக்காக 81 ரஞ்சி இன்னிங்ஸ்களில் 44.25 என்ற சராசரியுடன் 3,142 ரன்கள் குவித்ததுடன், மூன்று உள்ளூர் கோப்பைகளை வென்ற அணியை வழிநடத்திய போதிலும், அணியில் தனது இடத்திற்கு ஒருபோதும் பாதுகாப்பு இருந்ததில்லை என்று அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். “தேர்வாளர்களிடமிருந்து எனக்கு ஒருபோதும் பாதுகாப்பான உணர்வு கிடைத்ததில்லை. ஒவ்வொரு முறையும் என்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திலேயே இருந்தேன். பயிற்சியாளர் செந்தில்நாதன் அவர்கள், தேர்வாளர்களின் எண்ண ஓட்டத்தை என்னிடம் தெரிவித்தபோது, இனி இந்த அமைப்பில் போராடுவதில் அர்த்தமில்லை என்று உணர்ந்தேன்,” என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், கடந்த சில ஆண்டுகளாக பேட்டிங் வரிசையில் நிரந்தரமான இடம் இல்லாததும் தனது ஆட்டத்தை பாதித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். “2022-ல் மட்டும், நான் 6-வது இடத்தில் தொடர்ந்து பேட்டிங் செய்து, மூன்று சதங்களை அடித்தேன். ஆனால், அதன் பிறகு 3-வது இடத்தில் இருந்து 7-வது இடம் வரை எல்லா இடங்களிலும் ஆட வைக்கப்பட்டேன். இந்தக் குழப்பங்கள் அனைத்தும் என்னை மனதளவில் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக மாற்றியுள்ளது,” என்றார். தற்போது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திடமிருந்து தடையில்லா சான்றிதழைப் பெற்றுள்ள விஜய் சங்கர், தனது கிரிக்கெட் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்க, திரிபுரா அணிக்காக ஹனுமா விஹாரியுடன் இணைந்து விளையாட உள்ளார்.
About the Author
RK Spark