ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே நென்மேனியில் காரும், மினி லாரியும் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
ராமநாதபுரம் செட்டியார் தெருவைச் சேர்ந்த கோவிந்தராஜ் (65) என்பவர் தனது குடும்பத்தார் ஜமுனா (55) ரூபினி(30) சரண்ராஜ் (30) ஆகியோருடன் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காரில் குற்றாலம் சென்று கொண்டிருந்தார். காரை மணக்குடியைச் சேர்ந்த காளீஸ்வரன் (28) என்பவர் ஓட்டி வந்தார்.
மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் பரமக்குடி அருகே நென்மேனி எனும் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் கார் வந்து கொண்டிருந்த போது, எதிரே மதுரையில் இருந்து வீட்டை காலி செய்து பொருட்களை ஏற்றிக்கொண்டு ராமநாதபுரம் நோக்கி வந்த மினி லாரியுடன் நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் காரிலிருந்த ஜமுனா, ரூபினி, டிரைவர் காளிஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காரில் இருந்த கோவிந்தராஜ், சரண்ராஜ் ஆகியோருக்கு பரமக்குடியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மதுரை மருத்துவமனையில் கோவிந்தராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆக அதிகரித்தது.
மினி லாரியில் இருந்த ஓட்டுநர் முத்து ராஜா (23), நாகநாதன் (47 ஜெயமாலா (44) ஆகிய மூவரும் பரமக்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று மேல் சிகிக்சைக்காக மதுரை கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து பரமக்குடி தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.