புதுடெல்லி: பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இதனிடையே வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட அல்லது விடுபட்ட 65 லட்சம் வாக்காளர்கள், தங்களது ஆதார் எண்ணுடன் இணையதளம் வாயிலாகவே செப்டம்பர் 1 வரை விண்ணப்பிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
இந்நிலையில் இந்த காலக்கெடுவை செப்டம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கக் கோரி ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), ஏஐஎம்ஐஎம் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுக்கள் மீதான விசாரணையை செப்டம்பர் 1-ம் தேதி உச்ச நீதிமன்றம் நடத்தவுள்ளது. நீதிபதிகள் சூர்யகாந்த், ஜோய்மால்யா பாக்சி, விபுல் எம்.பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தவுள்ளது.