சென்னையின் முக்கிய சாலைகளில் பலத்த பாதுகாப்புடன் விநாயகர் ஊர்வலம்: 1,800-க்கும் மேற்பட்ட சிலைகள் கடலில் கரைப்பு

சென்னை: சென்னையில் விநாயகர் ஊர்வலம் நேற்று நடைபெற்றது. முக்கிய சாலைகளில் பலத்த பாதுகாப்புடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட 1,800-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 27-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் பந்தல் அமைத்து, விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்பட்டது.

சென்னை காவல் ஆணையர் அலுவலக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 1,800-க்கும் மேற்பட்ட இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், பலத்த பாதுகாப்புடன் விநாயகர் ஊர்வலம் நேற்று நடைபெற்றது. சிலைகளை கரைக்க சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், பாலவாக்கம் பல்கலை நகர், திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை, காசிமேடு ஆகிய 4 கடற்கரை பகுதிகளில் போலீஸார் அனுமதி வழங்கியிருந்தனர்.

சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்போது, காவல் துறை விதித்த கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. சென்னையின் பல்வேறு முக்கிய சாலைகளில், இடையூறின்றி விநாயகர் ஊர்வலம் செல்லும் வகையில், போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டிருந்தது.

சென்னை முழுவதும் 16,500 போலீஸார், 1,500 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆம்புலன்ஸ் வாகனங்கள், தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. கண்காணிப்பு கோபுரங்கள் வழியாக போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். சிலைகள் கரைக்கப்படும் இடங் களில், நீச்சல் தெரிந்த வீரர்கள், தன்னார்வலர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். பொதுமக்கள் கடலில் இறங்க போலீஸார் அனுமதி வழங்கவில்லை.

சென்னையில் ஆங்காங்கே உள்ள பந்தல்களில் இருந்து விநாயகர் ஊர்வலம் நேற்று காலை 10 மணி முதல் புறப்படத் தொடங்கியது.

மேள, தாளங்கள் முழங்க முக்கிய சாலைகள் வழியாக விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. பட்டினப்பாக்கம் உள்ளிட்ட 4 இடங்களிலும் ராட்சத கிரேன்கள் உதவியுடன் 1,800-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.