இலங்கை: செம்மணி புதைகுழியில் 209 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு

கொழும்பு,

இலங்கையில் 30 ஆண்டுகளுக்கும் மேல் நடந்த உள்நாட்டு போரின்போது லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதுடன், ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயினர். பலர் காயமடைந்தனர். உள்நாட்டு போரின்போது 1998-ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடந்த வழக்கு ஒன்றில் தண்டனை பெற்ற ராணுவ வீரர் ஒருவரால் யாழ்ப்பாணம் மாவட்டம் செம்மணி என்ற இடம் மனித புதைகுழி என முதன்முதலாய் அம்பலப்படுத்தப்பட்டது.

அங்கு நடந்த அகழாய்வின்போது 15 எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றில் சில எலும்புக் கூடுகள் கண்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து, உள்நாட்டு போரின்போதும், போர் நிறைவடைந்த பிறகும் யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, மாத்தளை, சூரியகந்த, வனவாசல, கொழும்பு துறைமுகம் என 20-க்கும் மேற்பட்ட பகுதிகளில் மனிதப் புதைகுழிகள் இருந்தது கண்டறியப்பட்டது.

தற்போது உள்நாட்டு போர் உக்கிரமாக நடந்த யாழ்ப்பாணம் மாவட்டம், செம்மணி சிந்துப்பாத்தி என்ற பகுதியில் மற்றொரு இடத்தில் மனித புதைகுழியென சந்தேகிக்கப்படும் இடத்தில் கடந்த ஜூன் மாதம் அகழாய்வுப் பணி தொடங்கப்பட்டது. அப்போது சில எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த ஜூன் மாதத்திலிருந்து ஆக.31 வரை செம்மணி சிந்துபாத்தியில் மூன்று கட்ட அகழாய்வு நடந்தது. இதுவரை 209 எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் சிறுவர்களின் எலும்புக் கூடுகள் அதிகளவில் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிறுவர்களின் காலணிகள், விளையாட்டு பொருட்கள், புத்தகப் பைகள் போன்றவையும் கண்டெடுக்கப்பட்டுள்ளது சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.