நண்பர்களுடன் சேர்ந்து போட்டிபோட்டு மது குடித்த பள்ளி மாணவர் கவலைக்கிடம்

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருவனந்தபுரத்தில் பள்ளி மாணவர்கள் 7 பேர் சேர்ந்து ஓணம் கொண்டாடினர். அவர்கள் அனைவரும் புதிய கட்டுமானப் பணி நடைபெற்று கொண்டிருந்த ஒரு வீட்டு கட்டிடத்தில் அமர்ந்து மது குடித்துள்ளனர். ஒருவருக்கொருவர் போட்டி போட்டு அதிகமாக மதுபானம் அருந்தி வந்தனர்.

அப்போது, அவர்களில் ஒருவன் மதுபானத்தில் தண்ணீர் சேர்க்காமல் நேரடியாக குடித்துள்ளார். இதையடுத்து, அந்த மாணவர் திடீரென மயங்கி விழுந்தார். அவர் சுயநினைவின்றி கிடந்ததை பார்த்த மற்ற மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மாணவருக்கு ஏதோ ஆகிவிட்டது என பயந்த 5 மாணவர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர். ஆனால், ஒரு மாணவர் மட்டும் அங்கு இருந்தார். அவர், சுயநினைவின்றி கிடந்த தனது நண்பரை காப்பாற்றுமாறு திருவனந்தபுரம் அருங்காட்சியக போலீஸ் நிலையத்தில் தகவல் கொடுத்து கதறியுள்ளார்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், மயக்க நிலையில் கிடந்த பள்ளி மாணவரை மீட்டு, திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு எப்படி மதுபானம் கிடைத்தது? அவர்கள் நேரடியாக மதுக்கடையில் மதுபானம் வாங்கினார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.