புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணியின் முதன்மை ஸ்பான்சராக (டைட்டில்) ஆன்லைன் விளையாட்டு தளமான டிரீம்11 இருந்து வந்தது. மத்திய அரசு சமீபத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை நிறைவேற்றியதைத் தொடர்ந்து, டிரீம்11 ஒப்பந்தம் காலம் முடிவதற்கு முன்பாகவே விலக நேரிட்டது. இதனால் வருகிற 9-ந்தேதி தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் சீருடையில் டைட்டில் ஸ்பான்சர் பெயர் இல்லாமல் விளையாட உள்ளனர்.
இந்த நிலையில் இந்திய அணிக்கான டைட்டில் ஸ்பான்சர்ஷிப்புக்கு தகுதியான நிறுவனங்கள் விண்ணப்பிக்கும் படி இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று முறைப்படி அழைப்பு விடுத்தது. ஆனால் ஆன்லைன் சூதாட்டம் மூலம் பணபரிவர்த்தனை செய்யும் நிறுவனங்கள், அவற்றில் முதலீடு வைத்துள்ள நிறுவனங்கள், நபர்கள் இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ எங்கு இருந்தாலும் ஸ்பான்சர்ஷிப் உரிமம் கோருவதற்கு அனுமதி இல்லை. மேலும், கிரிப்டோகரன்சி சார்ந்த நிறுவனங்களுக்கும் அனுமதி கிடையாது என கிரிக்கெட் வாரியம் தெளிவுப்படுத்தியுள்ளது.
இதற்கான விண்ணப்பத்தை வருகிற 12-ந்தேதிக்குள் ரூ.5 லட்சம் செலுத்தி வாங்கிக் கொள்ள வேண்டும். சமர்ப்பிக்க கடைசி நாள் 16-ந்தேதியாகும். கடந்த 3 ஆண்டுகளில், சராசரியாக குறைந்தது ரூ.300 கோடி வர்த்தகம் செய்துள்ள நிறுவனங்களே இதற்கு விண்ணப்பிக்க முடியும். புதிய ஒப்பந்தத்தின் மூலம் ரூ.450 கோடி வரை வருவாய் கிடைக்கும் என கிரிக்கெட் வாரியம் எதிர்பார்க்கிறது.