லக்னோ ,
உத்தர பிரதேசத்தில் தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவி, மெட்டா நிறுவனத்தின் அலர்ட்டால் காப்பாற்றப்பட்டுள்ளார் . உத்தர பிரதேசம் மாநிலம் பரேலியை சேர்ந்த கல்லூரி மாணவி, இளைஞர் ஒருவரை இன்ஸ்டாகிராமில் காதலித்து வந்தார்.
இந்த நிலையில் அந்த இளைஞர் திடீரென தொடர்பைத் துண்டித்துள்ளார், இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி பூச்சிக் கொல்லி மருந்தையும், தற்கொலை குறிப்பையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். மாணவியின் தற்கொலை குறிப்பு குறித்து உள்ளூர் காவல் நிலையத்துக்கு மெட்டா நிறுவனம் அலர்ட் செய்துள்ளது .
மெட்டா நிறுவனம் அலர்ட் செய்ததன்பேரில் போலீசார் 16 நிமிடத்தில் அந்த மாணவியின் இருப்பிடத்திற்கு சென்று, பூச்சி மருந்து குடித்த நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மாணவியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.இதனால் தற்போது மாணவி உடல்நிலை சீராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் தற்கொலை தொடர்பான பதிவு செய்யப்பட்டால் அது குறித்த அலர்ட்டை பெறுவதற்காக 2022 முதல் மெட்டாவுடன் உத்தரப் பிரதேச காவல்துறை ஒரு ஏற்பாட்டை கொண்டுள்ளது. இந்த ஏற்பாட்டால் ஜனவரி 2023 முதல் மாநிலத்தில் 1,315 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர் .