ஜாஷ்பூர்,
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி சமீபத்தில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து விநாயகர் சிலைகளை நீரில் கரைக்கும் சடங்குகளும் நடந்து வருகின்றன.
சத்தீஷ்காரின் ஜாஷ்பூர் மாவட்டத்தில் ஜுருதந்த் என்ற கிராமத்தில் விநாயகர் சிலைகளை நீரில் கரைப்பதற்காக உள்ளூரை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் ஊர்வலம் சென்றனர். அப்போது, சொகுசு கார் ஒன்று திடீரென அந்த கூட்டத்திற்குள் புகுந்தது.
இதுபற்றி ஜாஷ்பூர் மாவட்ட மூத்த போலீஸ் சூப்பிரெண்டு சசி மோகன் கூறும்போது, விபின் பிரஜாபதி (வயது 17), அரவிந்த் கெர்கெட்டா (வயது 19) மற்றும் கீரோவதி யாதவ் (வயது 32) ஆகிய 3 பேர் கார் மோதி பலியானார்கள். இவர்கள் தவிர 22 பேர் காயமடைந்தனர்.
அவர்கள் அனைவரும் சுர்குஜா மாவட்டத்தில் உள்ள அம்பிகாபூர் மருத்துவ கல்லூரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர் என கூறினார். குடிபோதையில் விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பிய, கார் ஓட்டுநரான சுக்சாகர் வைஷ்ணவ் (வயது 40) கைது செய்யப்பட்டார். அவருடைய காரும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்றார்.