Ravichandran Ashwin : ரவிச்சந்திரன் அஸ்வின் பிக் பாஷ் லீக் போட்டிகளில் பங்கேற்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகிறது. இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுடன் (CA) பேச்சுவார்த்தையில் இருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. ரவிச்சந்திரன் அஸ்வின், பிக் பாஷ் லீக் (BBL) போட்டிகளில் விளையாடும் முதல் முன்னணி இந்திய கிரிக்கெட் வீரர் ஆகலாம். 38 வயதான அஸ்வின், ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதாக அறிவித்த உடனேயே, கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் (CA) தலைமை நிர்வாக அதிகாரி டாட் கிரீன்பெர்க், அஸ்வினை அணுகியுள்ளார்.
Add Zee News as a Preferred Source
அஸ்வின் வெளிநாட்டு லீக்குகளில் விளையாடும் தனது விருப்பத்தை ஏற்கனவே தெரிவித்திருந்தார், மேலும் BBL தான் ஒரு ஃப்ரீலான்ஸ் டி20 வீரராக அவருக்கு முதல் வாய்ப்பாக அமையும் என்று க்ரிக்பஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அஸ்வினிடம் பேசியதை கிரீன்பெர்க் உறுதிப்படுத்தினார். “அஸ்வின் போன்ற ஒரு சிறந்த வீரரை BBL போட்டிகளில் விளையாட வைப்பது பல விதங்களில் சிறப்பாக இருக்கும். அவர் ஒரு சாம்பியன் கிரிக்கெட் வீரர், பிக் பாஷ் லீக்கிற்கும், எங்கள் கிரிக்கெட் சீசனுக்கும் நிறைய பங்களிப்பார்” என்று அவர் க்ரிக்பஸ் இடம் தெரிவித்தார்.
அடுத்த கட்டமாக, ஒரு திட்டத்தை உருவாக்குவதற்காக, அணிகள் மற்றும் பங்குதாரர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். எட்டு BBL அணிகளும் தங்கள் சம்பள பட்ஜெட்டில் பெரும்பாலானவற்றை ஏற்கனவே பயன்படுத்தியிருந்தாலும், அஸ்வினை சேர்த்துக்கொள்ள கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஸ்பெஷல் பர்மிசனை கொடுக்க ஆயத்தமாகி வருகிறது.
மெல்போர்னில் சேருவதற்கான வாய்ப்பு, வார்னர் பாணியிலான ஒப்பந்தம்?
பேச்சுவார்த்தைகள் முன்னேறினால், அஸ்வின் மெல்போர்ன் அணியில் சேர வாய்ப்புள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. இரண்டு சீசன்களுக்கு முன்பு டேவிட் வார்னரின் ஒரு போட்டிக்கு இவ்வளவு சம்பளம் என்ற பாணியிலான ஒப்பந்தத்தைப் போல, கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஊதியம் அல்லது பிராண்ட் ஒப்பந்தங்களை கூடுதலாக அஸ்வினுக்கு கொடுக்க முன்வரலாம்.
அஸ்வினின் இந்த நடவடிக்கை ஏன் முக்கியமானது?
பல ஆண்டுகளாக, முன்னணி வெளிநாட்டு வீரர்களை ஈர்க்க தவறியதற்காக BBL விமர்சிக்கப்பட்டுள்ளது. அஸ்வினின் வருகை, சர்வதேச கவனத்தை ஈர்ப்பது மட்டுமல்லாமல், பிக் பாஷ் லீக்கை ஐபிஎல்-க்கு இணையாக ஒரு முன்னணி டி20 போட்டியாக நிலைநிறுத்த கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் முயற்சிக்கு பலம் சேர்க்கும். அஸ்வினின் சேர்க்கை என்பது பிக்பாஷ் லீக்கில் தனியார் முதலீடுகளை ஈர்க்க கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்கு உதவக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மற்ற வீரர்களுக்கு ஒரு வழித்தடமா?
இந்த ஒப்பந்தம் வெற்றிகரமாக நடந்தால், அஸ்வின் ஐபிஎல் ஓய்வுக்குப் பிறகு மற்ற இந்திய கிரிக்கெட் வீரர்களும் வெளிநாட்டு லீக்குகளில் விளையாடுவதற்கு கதவைத் திறக்கக்கூடும். விராட் கோலி, ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா போன்ற பெயர்களும் வரும் ஆண்டுகளில் பிக் பாஷ் லீக்கில் விளையாடலாம். விளையாடுவதைத் தவிர பயிற்சி மற்றும் வர்ணனை செய்வதிலும் அஸ்வின் ஆர்வம் காட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
About the Author
S.Karthikeyan