லீட்ஸ்,
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் ஆடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெறுகிறது.
இதன்படி இங்கிலாந்து- தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி லீட்சில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி வெறும் 24.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த நிலையில் 131 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜேமி ஸ்மித் 54 ரன்கள் அடித்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் கேஷவ் மகராஜ் 4 விக்கெட்டுகளும், வியான் முல்டர் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 132 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மார்க்ரம் – ரிக்கல்டன் களமிறங்கினர். இதில் ரிக்கல்டன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் மார்க்ரம் அதிரடியில் வெளுத்து கட்டினார். இங்கிலாந்து பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த அவர் வெறும் 23 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் இலக்கை நெருங்கிய தருவாயில் விக்கெட்டை பறிகொடுத்தார். 55 பந்துகளை எதிர்கொண்ட மார்க்ரம் 86 ரன்களில் ஆட்டமிழந்தார். மார்க்ரம் – ரிக்கல்டன் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது குறிப்பிடத்தக்கது. அடுத்து வந்த பவுமா ஆட்டம் சமன் ஆன நிலையில் 6 ரன்களில் நடையை கட்டினார். பின்னர் வந்த ஸ்டப்ஸ் சந்தித்த முதல் பந்திலேயே அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய பிரெவிஸ் சிக்சர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார்.
முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 20.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் அடித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரிக்கல்டன் 31 ரன்களுடனும், பிரெவிஸ் 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷித் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் 4-ம் தேதி நடைபெற உள்ளது.