Amit Mishra Retirement: கடந்த 25 ஆண்டு காலமாக உள்ளூர் போட்டிகள் தொடங்கி, சர்வதேச போட்டிகள் வரை தனது அற்புதமான லெக் ஸ்பின் பந்துவீச்சால் தனி முத்திரை பதித்தவர் அமித் மிஷ்ரா. 42 வயதான அவர் இன்றுதான் அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.
Add Zee News as a Preferred Source
Amit Mishra: 2003இல் அறிமுகம்
ஹரியானா வீரரான அமித் மிஷ்ரா 2000ஆம் ஆண்டில் உள்ளூர் கிரிக்கெட்டில் தடம் பதித்தார். தொடர்ந்து 2003ஆம் ஆண்டில் இந்திய ஓடிஐ அணியில் இடம்பிடித்தார். அதைத் தொடர்ந்து 2008ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளிலும், 2010ஆம் ஆண்டில் டி20ஐ போட்டிகளிலும் அறிமுகமானார். அதே நேரத்தில் 2016ஆம் ஆண்டில் கடைசியாக டெஸ்ட் மற்றும் ஓடிஐ போட்டிகளில் விளையாடியிருக்கிறார். அதன்பின் 2017இல் கடைசி டி20ஐ போட்டியை விளையாடியிருக்கிறார். முதல் தர போட்டிகளில் 2017ஆம் ஆண்டு வரையிலும், லிஸ்ட் ஏ போட்டிகளில் 2019ஆம் ஆண்டு வரையிலும் அமித் மிஸ்ரா விளையாடியிருக்கிறார்.
Amit Mishra: 156 சர்வதேச விக்கெட்டுகள்
இவர் 22 டெஸ்ட் போட்டிகளில் 76 விக்கெட்டுகள், 36 ஓடிஐ போட்டிகளில் 64 விக்கெட்டுகள், டி20ஐ போட்டிகளில் 16 விக்கெட்டுகள் என மொத்தம் 156 சர்வதேச விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். முதல்தர போட்டிகளில் 535 விக்கெட்டுகள், லிஸ்ட் ஏ போட்டிகளில் 252 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார். தொடர்ந்து கிரிக்கெட் மீது இருந்த ஈடுபாட்டால் தனது 40 வயது வரையிலும் ஐபிஎல் போட்டிகளில் அமித் மிஸ்ரா விளையாடியிருக்கிறார்.
Amit Mishra: ஐபிஎல் தொடரில் அமித் மிஷ்ரா
ஐபிஎல் தொடரை பொறுத்தவரை 2008ஆம் ஆண்டு முதல் 20024ஆம் ஆண்டுவரை தொடர்ந்து விளையாடியிருக்கிறார், 2022இல் மட்டும் விளையாடவில்லை. டெல்லி டேர்டெவில்ஸ் (2008 – 2010), டெக்கான் சார்ஜர்ஸ் (2011, 2012), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (2013, 2014), டெல்லி (2015 – 2021), லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (2023, 2024) உள்ளிட்ட அணிகளில் அமித் மிஷ்ரா விளையாடி உள்ளார்.
மொத்தம் 162 இன்னிங்ஸ்களில் 174 விக்கெட்டுகளை மிஷ்ரா சரித்துள்ளார். இவர் கடைசியாக 2024ஆம் ஆண்டு லக்னோவில் நடந்த ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி சார்பில் களம்கண்டார். அதுவே அவரது கடைசிப் போட்டி. இவரை எந்த அணியும் கடந்த மெகா ஏலத்தில் எடுக்காத நிலையில், அமித் மிஷ்ரா இந்த ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் மூன்று முறை (2008, 2011, 2013 ) ஹாட்ரிக் விக்கெட்டுகளை பதிவு செய்த ஒரே வீரர் ஆவார்.
Amit Mishra: ஓய்வு குறித்து அமித் மிஷ்ரா
ஓய்வு குறித்து பேசிய அமித் மிஷ்ரா, “எனது கிரிக்கெட் வாழ்க்கையின் இந்த 25 ஆண்டுகள் மறக்க முடியாதவை. இவ்வளவு காலமாக என்னுடன் பயணிதத் பிசிசிஐ, நிர்வாகம், ஹரியானா கிரிக்கெட் சங்கம், துணை பயிற்சியாளர்கள், எனது சக ஊழியர்கள் மற்றும் எனது குடும்ப உறுப்பினர்களுக்கு நான் மிகவும் நன்றி கடன்பட்டுள்ளேன்.
நான் விளையாடிய போதெல்லாம், எங்கிருந்தாலும், அன்பும் ஆதரவும் கொடுத்து பயணத்தை மறக்க முடியாததாக மாற்றிய ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். கிரிக்கெட் எனக்கு எண்ணற்ற நினைவுகளையும் விலைமதிப்பற்ற பாடங்களையும் கற்பித்துள்ளது. மேலும் மைதானத்தில் இருந்த ஒவ்வொரு தருணமும் நான் வாழ்நாள் முழுவதும் பொக்கிஷமாக வைத்திருக்கும் ஒரு நினைவாக இருந்து வருகிறது” என குறிப்பிட்டுள்ளார்.