பெய்ஜிங்,
2-ம் உலகப் போரில் ஜப்பானை தோற்கடித்ததன் 80-வது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் சீனா இன்று மிக பிரமாண்ட ராணுவ அணிவகுப்பை நடத்தியது. இந்த அணிவகுப்பு வரலாற்று சிறப்புமிக்க தியான்மென் சதுக்கத்தில் நடந்தது. சீன அதிபர் ஜி ஜின்பிங், தியான்மென் சதுக்கத்தில் நடந்து சென்று வீரர்களுடன் கைகுலுக்கினர். இந்நிகழ்ச்சியில் ரஷ்ய அதிபர் புதின், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், மியான்மர் ராணுவத் தளபதி மின் ஆங் ஹ்லைங், ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன், மங்கோலிய அதிபர் குரேல்சுக் உக்னா, உஸ்பெகிஸ்தான் அதிபர் மிர்சியோயேவ், பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு மற்றும் மலேசியா, இந்தோனேசியா, ஜிம்பாப்வே, மத்திய ஆசிய நாடுகளின் தலைவர்கள் உள்பட 26 நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அவர்கள் சீன அதிபர் ஜின்பிங்குடன் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பை பார்வையிட்டனர். இதில் J-20 ஸ்டெல்த் போர் விமானங்கள் சாகசங்களை நிகழ்த்தியது. சீனா முதல் முறையாக நவீன ஆயுதங்களை காட்சிப்படுத்தியது. போர் விமானங்கள், பிரமாண்டமான போர் டாங்கிகள், அதிவேக ஏவுகணைகள், ரோபோ டிரோன்கள் உள்ளிட்டவைகளின் அணிவகுப்பு நடந்தது. சீனா தனது 4-ம் தலைமுறை பிரதான போர் டாங்கியின் முதல் மாதிரியை வெளியிட்டது. பல்வேறு படைப்பிரிவுகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் அணிவகுத்துச் சென்றனர். இந்த அணிவகுப்பு முடிந்தபோது சுமார் 80 ஆயிரம் புறாக்கள் பறக்கவிடப்பட்டன. அதைத் தொடர்ந்து ஏராளமான பலூன்களும் பறக்கவிடப்பட்டன. சீனா தனது ராணுவ ஆயுத பலத்தை உலகுக்கு காட்டும் வகையில் இந்த அணிவகுப்பை நடத்தியது.
தொடர்ந்து சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசியதாவது: வலிமையானவர்கள், பலவீனமானவர்களை வேட்டையாடும் காட்டாட்சிக்கு உலகம் ஒருபோதும் மீண்டும் திரும்பி விடக் கூடாது. சீனாவின் வளர்ச்சியை எவரும் தடுக்க முடியாது. அச்சுறுத்தவும் முடியாது. உலக அமைதி மற்றும் வளர்ச்சிக்கு சீனாவின் பங்களிப்பை யாரும் மறுக்க முடியாது” என்று கூறினார். அமெரிக்க அதிபர் டிரம்ப், தற்போது சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக வரியை காட்டி மிரட்டி வரும் நிலையில், அமெரிக்காவை மறைமுகமாக சீண்டும் வகையில் ஜி ஜின்பிங் இவ்வாறு பேசியுள்ளார்.