பாலக்காடு,
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மலம்புழா, கஞ்சிக்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுருளிக்கொம்பன் என்ற காட்டுயானை புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. மேலும் இந்த யானை பார்வைத்திறன் குறைபாட்டுடன் உள்ளதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சம்பவத்தன்று காலை கோவையில் இருந்து பாலக்காடு நோக்கி மெமு ரெயில் பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. இதற்கிடையே கஞ்சிக்கோடு அருகே உள்ள தண்டவாளத்தில் சுருளிக்கொம்பன் யானை நின்று கொண்டிருந்தது. இதனால் கஞ்சிக்கோடு பகுதியில் வந்த மெமு ரெயில் பைலட், தண்டவாளத்தில் காட்டுயானை நிற்பதை பார்த்ததும் உடனே ரெயிலை சிறுதொலைவில் நிறுத்தினார். இதையறிந்து பயணிகள் அச்சம் அடைந்தனர்.
தொடர்ந்து தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் மற்றும் வனத்துறையினர் விரைந்து வந்து பட்டாசு வெடித்து தண்டவாளத்தில் இருந்த யானையை அங்கிருந்து விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு யானை, தண்டவாளத்தில் இருந்து நகர்ந்து நின்றது. இதனால் பாலக்காடு-கோவை மெமு ரெயில் அரை மணிநேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. தண்டவாளத்தில் ரெயிலை வழிமறித்து நின்ற காட்டுயானையால் பரபரப்பு ஏற்பட்டது.