வழிப்பறி கொள்ளையர்களை கண்டுபிடிக்க முடியாததால் நகையை பறிகொடுத்த மூதாட்டிக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு: நீதிமன்றம் உத்தரவு

சென்னை: திரு​வள்​ளூரில் 7 ஆண்​டு​களாக வழிப்​பறி கொள்​ளை​யரை கண்​டு​பிடிக்க முடி​யாத​தால் 17.5 பவுன் நகைகளை பறிகொடுத்த மூதாட்​டிக்கு ரூ. 4 லட்​சம் இழப்​பீ​டாக வழங்க தமிழக அரசுக்கு உத்​தர​விட்​டுள்ள உயர் நீதி​மன்ற நீதிபதி டி. பரத சக்​ர​வர்த்​தி, இது​போன்ற வழக்​கு​களில் இழப்​பீட்​டுத்​தொகையை அதி​கரித்து வழங்​கு​வது தொடர்​பாக தமிழக அரசும் அரசாணை​யில் திருத்​தம் மேற்​கொள்ள வேண்​டுமென அறி​வுறுத்​தி​யுள்​ளார்.

திரு​வள்​ளூரைச் சேர்ந்த கிருஷ்ணவேணி (68) கடந்த 2018-ம் ஆண்டு ஆக.6-ம் தேதி தனது கணவர் பழனி​யுடன் மருத்​துவ பரிசோதனைக்​காக சாலை​யில் நடந்து சென்​றுள்​ளார். அப்​போது அவர்​களை அழைத்த ஒரு கும்​பல், இப்​பகு​தி​யில் வழிப்​பறி திருடர்​கள் இருப்​ப​தால் அணிந்​துள்ள தாலிச்​செ​யின், வளை​யல், மோதிரம் உள்​ளி்ட்ட நகைகளை பத்​திர​மாக கழட்டி பேக்​கில் வைத்​துக்​கொள்​ளுங்​கள் என அறி​வுரை கூறி​யுள்​ளனர். அவர்​களை மாறு​வேடத்​தில் இருக்​கும் போலீ​ஸார் என நினைத்த கிருஷ்ணவேணி தனது 17.5 பவுன் நகைகளை கழட்டி பேக்​கில் வைத்த மறுநிமிடம் மற்​றொரு கும்​பல் அந்த நகைகளை கொள்​ளை​யடித்து தப்​பியது.

அதையடுத்து இந்த வழக்​கில் இறுதி அறிக்கை தாக்​கல் செய்து தனது நகைகளை மீட்க உத்​தர​விடக்​கோரி கிருஷ்ணவேணி உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​திருந்​தார். இந்த மனு மீதான விசா​ரணை நீதிபதி டி. பரத சக்​ர​வர்த்தி முன்​பாக நடந்​தது. அப்​போது மனு​தா​ரர் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் தட்​சிணா​மூர்த்​தி, இந்த வழக்​கில் போலீ​ஸார் கடந்த 7 ஆண்​டு​களாக குற்​ற​வாளி​களை கண்​டு​பிடித்து நகைகளை மீட்க எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்​லை. இறுதி அறிக்​கை​யும் தாக்​கல் செய்​ய​வில்​லை, என குற்​றம் சாட்​டி​னார்.

திரு​வள்​ளூர் டவுன் போலீ​ஸார் தரப்​பில் ஆஜரான குற்​ற​வியல் வழக்​கறிஞர் சி.இ.பிர​தாப், ‘‘இந்த வழக்​கின் குற்​ற​வாளி​கள் யார் என இது​நாள் வரை அடை​யாளம் காண​முடிய​வில்லை என்​ப​தால் குற்​ற​வாளி​களை கண்​டு​பிடிக்க முடிய​வில்லை எனக்​கூறி திரு​வள்​ளூர் குற்​ற​வியல் நடு​வர் நீதி​மன்​றத்​தில் இறுதி அறிக்கை தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது. ஒரு​வேளை குற்​ற​வாளி​கள் யார் என பின்​னர் தெரிய​வந்​தால் இந்த வழக்கு மீண்​டும் விசா​ரிக்​கப்​படும், என்​றார்.

அதையடுத்து நீதிபதி டி. பரத சக்​ர​வர்த்தி பிறப்​பித்​துள்ள உத்​தர​வி்ல் கூறி​யிருப்​ப​தாவது: மூத்த குடிமக்​களை குறி​வைத்து இதுபோன்ற திருட்​டு, கொள்ளை சம்​பவங்​கள் கொஞ்​சம்​கூட ஈவு, இரக்​கமற்ற, மனசாட்​சி​யற்ற நபர்​கள் மூல​மாக அடிக்​கடி நடத்தப்​படு​கின்​றன. இந்த வழக்​கில் வயதான தம்​ப​தி​யின் கவனத்தை திசை​திருப்பி 17.5 பவுன் நகைகளை வழிப்​பறி செய்துள்ளனர். ஆனால் கடந்த 7 ஆண்​டு​களாக குற்​ற​வாளி​களை கண்​டு​பிடிக்க முடிய​வில்லை என போலீ​ஸார் கூறு​வது அதிருப்தி​யளிக்​கிறது. போலீ​ஸாரின் இந்த நடவடிக்கை மனு​தா​ரருக்கு துயரத்​தைத்​தான் அதி​கரிக்​கும்.

இது​போல நகை, பணம் போன்​றவற்றை பறி​கொடுக்​கும் வயதான முதி​ய​வர்​கள் பொருளா​தார ரீதி​யாக மட்​டுமின்​றி, மனதளவிலும் கடுமை​யான பாதிப்​பு​களை சந்​தித்து நோய்​வாய்​படு​கின்​றனர். நூறு ரூபாயை இழந்​தா​லும் அவர்​களால் தாங்​கிக்​கொள்ள முடி​யாது. அந்த பாதிப்பு முது​மையை விட கொடுமை​யானது.

அவர்​கள் இடத்​தில் இருந்து அவர்​களின் வலியை நாம் உணர்ந்து செயல்பட வேண்​டும். உச்ச நீதி​மன்ற உத்​தர​வுப்​படி இது​போன்ற குற்ற வழக்​கு​களி்ல் பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு அதி​க பட்​ச​மாக ரூ. 1 லட்​சத்தை இழப்​பீ​டாக வழங்​கும் வகை​யில் தமிழக அரசு கடந்த 2013-ம் ஆண்டு உத்​தர​விட்​டுள்​ளது. இந்த இழப்​பீட்​டுத்​தொகை கடந்த 12 ஆண்​டு​களுக்கு முன்​பாக நிர்​ண​யிக்​கப்​பட்ட ஒன்று.

அதே​நேரம் இது​போன்ற சம்​பவங்​களில் குற்​ற​வாளி​களை கண்​டு​பிடிக்க முடிய​வில்லை எனக்​கூறும்​போது தற்​போதுள்ள சந்தை மதிப்​பின் அடிப்​படை​யில் நகை மற்​றும் பணம் போன்​றவற்றை பறி​கொடுத்​தவர்​களுக்கு 30 சதவீதம் அல்​லது ரூ. 5 லட்​சம் இதில் எது குறை​வாக உள்​ளதோ அதை இழப்​பீட்​டுத்​தொகை​யாக வழங்க வேண்​டும்.

மனு​தா​ரர் பறி​கொடுத்த 17.5 பவுன் தங்க நகை​களின் தற்​போதைய மதிப்பு ரூ. 13.12 லட்​ச​மாக இருப்​ப​தால் அதில் 30 சதவீத​மான ரூ. 4 லட்​சத்தை மனு​தா​ரருக்கு 12 வார காலத்​துக்​குள், முடிந்த வரை உடனடி​யாக இழப்​பீ​டாக வழங்க வேண்​டும். இந்த தொகையை பெற்​றுக்​கொடுக்​கும் வகை​யில் திரு​வள்​ளூர் மாவட்ட சட்​டப்​பணி​கள் ஆணைக்​குழு தன்​னார்​வலர் ஒரு​வரை நியமித்து மனுதாரரிடம் விண்​ணப்​பம் பெற்று அந்த தொகையை வழங்க வேண்​டும்.

ஒரு​வேளை மனு​தா​ரரின் நகை திரும்ப கிடைத்​து​விட்​டால் இந்த இழப்​பீட்​டுத் தொகையை அவர் திருப்பி செலுத்த வேண்​டும். இந்த சிறிய தொகை மனு​தா​ரருக்கு ஏற்​பட்ட இழப்பை ஈடு செய்​யக்​கூடிய​தாக இருக்​காது என்​றாலும், அவர்​களுக்கு மனதள​வில் ஏற்​பட்ட காயங்​களுக்கு மருந்​தாக​வும், சில​நேரங்​களில் வாழ்​வா​தா​ரத்​துக்​கான ஆறு​தலாக​வும் இருக்​கும்.

இந்த சமூகம் நம்மை கவனித்​துக்​கொள்​கிறது என்ற நம்​பி்க்​கை​யும் அவர்​களுக்கு கிடைக்​கும். எனவே இது​போன்ற வழக்​கு​களில் பாதிக்​கப்​படும் முதி​ய​வர்​களுக்கு இழப்​பீட்​டுத்​தொகையை அதி​கரித்து வழங்​கும் வகை​யில் தமிழக அரசும் பாதிக்​கப்​பட்​டோருக்கான இழப்​பீட்​டுத் திட்​டத்​தின் கீழ் அரசாணை​யில் தேவை​யான திருத்​தங்​களை மேற்​கொண்டு தகுந்த உத்​தர​வு​களை பிறப்​பிக்க வேண்​டும், என உத்​தரவி்ட்​டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.