மும்பை,
13-வது மகளிர் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் வருகிற 30-ந் தேதி முதல் நவம்பர் 2-ந் தேதி வரை நடக்கிறது. இந்தியாவில் மகளிர் உலகக்கோப்பை அரங்கேறுவது இது 4-வது முறையாகும்.
இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இதன் தொடக்க ஆட்டத்தில் இந்தியா- இலங்கை அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில் இந்த உலகக்கோப்பை போட்டிக்கான முதல் கட்ட ஆன்லைன் டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கியது. லீக் ஆட்டங்களுக்கான டிக்கெட் விலை ரூ.100 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெண்கள் கிரிக்கெட்டுக்கு ரசிகர்கள் வருகையை அதிகரிக்கும் நோக்கில் டிக்கெட் மிகவும் குறைந்த விலையில் விற்கப்படுகிறது. இதன் 2-வது கட்ட டிக்கெட் விற்பனை வருகிற 9-ந் தேதி ஆரம்பமாகிறது.
கடந்த சீசனில் ஒரு டிக்கெட் விலை ரூ. 350-850 ஆக இருந்தது. அதனை ஒப்பிடுகையில் இது மிகக்குறைவானதாக கருதப்படுகிறது.