மும்பை,
மும்பை நகரின் 34 இடங்களில் மனித வெடிகுண்டுகள் இருப்பதாக, காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மும்பை நகர் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி நாளில் வைத்து வணங்கப்படும் விநாயகர் சிலைகளை 10-வது நாளான சதுர்தசியில் ஊர்வலமாக எடுத்துச் சென்று, நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். அதன்படி, செப்டம்பர் 6-ம் தேதி விநாயகர் ஊர்வலம் நடைபெறும் சூழலில், மும்பை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
அதில் பேசிய நபர், “பாகிஸ்தானில் இருந்து மும்பை நகருக்குள் 14 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளனர். மும்பை நகரின் 34 இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. 400 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்தை பயன்படுத்தி மும்பையின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்த லஷ்கர்-இ-ஜிஹாதி அமைப்பு திட்டமிட்டுள்ளது” என்று கூறியுள்ளார். இந்த தொலைபேசி மிரட்டலை தொடர்ந்து மும்பை நகர் முழுதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய மும்பை சட்டம் ஒழுங்கு இணை ஆணையர் சத்யநாராயண சவுத்ரி, “வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக காவல்துறை விசாரித்து வருகிறது. பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கும் இது குறித்து தகவல் கொடுக்கப்பட்டு, அவர்களும் விசாரணை நடத்தி வருகின்றனர். நாளை விநாயகர் ஊர்வலம் நடைபெறும் நிலையில், மும்பை முழுதும் 21,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்” என்று தெரிவித்தார். மும்பையில் நாளை விநாயகர் ஊர்வலம் நடைபெறும் சூழலில், இந்த வெடிகுண்டு மிரட்டல் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.