ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து மும்பைக்கு அதிக அளவில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், தானே மாவட்டத்தின் மிரா ரோடு காவல் நிலைய போலீசார், தெலுங்கானா காவல்துறையுடன் இணைந்து ஐதராபாத் செராமல்லி பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின்போது, ஒரு தனியார் ரசாயன தொழிற்சாலையில் ரகசியமாக போதைப்பொருள் தயாரிக்கப்பட்டு வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அங்கு அதிகபட்சமாக மெபட்ரோன் என்ற போதைப்பொருள் தயாரிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வங்காளதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண் உள்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர். அதோடு, இந்த கும்பலுக்கு மூளையாக செயல்பட்டு வந்த ஐ.டி. ஊழியரும் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.